13 ஆக., 2011



துடுப்பாட்ட செய்தி
மிகவும் பரிதாபமான நிலையில் இந்திய அணி
[ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 05:01.29 மு.ப GMT ]
இங்கிலாந்துக்கு எதிரான 3வது கிரிக்கட் டெஸ்டின் 3வது நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட நேர இறுதியில் இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது.
முன்னதாக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 710 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் பர்மிங்ஹாமில் புதன்கிழமை தொடங்கியது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
3 விக்கெட் இழப்புக்கு 456 ரன்களுடன் 3வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து வெள்ளிக்கிழமை தொடர்ந்தது. ஸ்ரீசாந்த் வீச்சில் 2 ரன்கள் எடுத்து குக் தனது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
தனது 71வது டெஸ்டில் விளையாடும் குக் எடுத்துள்ள 2வது இரட்டைச் சதம் இது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 235 ரன்கள் குவித்துள்ளார் குக் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மோர்கன் 199 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து ரெய்னா வீச்சில் சேவாக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார். குக், மோர்கன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தனர்.
போபாரா 7 ரன்களும், மாட் பிரையார் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பொறுமையுடன் விளையாடிவந்த குக் 545 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் 294 ரன்களுக்கு இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்ததும் இன்னிங்ஸ் முடித்துக் கொள்வதாக இங்கிலாந்து கப்டன் ஸ்டிராஸ் அறிவித்தார்.
பந்துவீச்சாளர் டிம் பிரெஸ்னென் 53 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2வது இன்னிங்ûஸ தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. சேவாக் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆண்டர்சன் வீச்சில் ஸ்டிராஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இந்த டெஸ்டின் 2 இன்னிங்ஸிலும் முதல் பந்திலேயே சேவாக் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. 2 நாள் ஆட்டம் மீதியுள்ள நிலையில் 451 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இந்தியா கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை: