24 ஏப்., 2012


யூரோ 2012: போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் விபரம்; பிளே- ஆப் ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுகல்
 யூரோ 2012 கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் மற்றும் பிளே-ஆப் ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகள் பற்றிய முழு விபரம் இங்கே...
 யூரோ 2012 கால்பந்து போட்டி உக்ரேன்-போலந்து நாடுகளில் வரும் ஜுன் மாதம் தொடங்க உள்ளது.16 நாடுகள் பங்கு பெறும் இந்த பிரமாண்டமான போட்டியில், போலந்தும் உக்ரேனும் போட்டியை நடத்தும் நாடுகள் என்ற வகையில் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதியுள்ள 14 இடங்களுக்கு ஐரோப்பா கண்டத்தின் 51 நாடுகள் மோதின. 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 'ஏ' முதல் 'எப்' வரை உள்ள பிரிவுகளில் 6 அணிகள் இடம் பிடித்திருந்தன. ஜி,எச்,ஐ பிரிவுகளில் 5 அணிகள் அடங்கியிருந்தன.கடந்த 13 மாதங்களாக தகுதி சுற்று போட்டிகள் நடந்து வந்தன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் யூரோவுக்கு தகுதி பெறும்.
 அந்த வகையில், 'ஏ' பிரிவில் 10 போட்டிகளில் விளையாடி 10 போட்டியிலும் வெற்றி பெற்று 30 புள்ளிகளை குவித்த ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது. 'பி'பிரிவில் ரஷ்யா 10 போட்டிகளில் 7 வெற்றி 2 டிராவுடன் 23 புள்ளிகளுடன் யூரோவுக்குள் நுழைந்துள்ளது.
 'சி'பிரிவில் 10 போட்டிகளில் 8ல் வெற்றியும் இரு டிராக்களுடன் 26 புள்ளிகளை பெற்ற இத்தாலியும் 'டி'பிரிவில் 10 போட்டிகளில் 6 ல் வெற்றியும் 3 டிராக்களுடன் 21 புள்ளிகள் எடுத்த பிரான்சும் யூரோவுக்கு முன்னேறியுள்ளன.
 பிரிவு 'ஈ'வில் இடம் பிடித்துள்ள நெதர்லாந்து 10 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்றது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி கண்டு 27 புள்ளிகளுடன் யூரோவுக்கு செல்கிறது.'எப்' பிரிவில் 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றியும் 3 சமநிலையும் கண்ட கீரீஸ் அணியும் யூரோவுக்கு தகுதி பெற்றுள்ளது.
 இது தவிர 'ஜி'பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து 8 போட்டிகளில் 5 வெற்றியும் 3 சமநிலையுடன் 18 புள்ளிகளை குவித்து யூரோவுக்கு முன்னேறியுள்ளது.'எச்'பிரிவில் இடம்பிடித்துள்ள டென்மார்க் 8 போட்டிகளில் 6 வெற்றி,ஒரு தோல்வி ஒரு சமநிலையுடன் 19 புள்ளியுடன் யூரோவில் இடம் பிடிக்கிறது.
 'ஐ'பிரிவில் இடம் பிடித்துள்ள உலக சாம்பியனும் தற்போதைய யூரோ சாம்பியனுமான ஸ்பெயின் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 24 புள்ளிகளுடன் யூரோவுக்கு தகுதி பெற்றுள்ளது.
 மேலும் இந்த 9 பிரிவுகளிலும் இருந்தும் சிறந்த இரண்டாம் இடம் பிடித்த அணியான சுவீடனும் யூரோவுக்கு தகுதி பெற்றுள்ளது. அதாவது சிறந்த ரன்னர்ஸ்-அப் அணி என்ற சிறப்பு தகுதியுடன் சுவீடன் யூரோவுக்கு செல்கிறது.இந்த அணி 'ஈ'பிரிவில் இடம் பிடித்திருந்தது.10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி இரு தோல்விகளுடன் 24 புள்ளிகளை சுவீடன் ஈட்டியிருந்தது.இதனால் சுவீடனுக்கும் யூரோ வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
 ஜெர்மனி,ரஷ்யா,இத்தாலி,பிரான்ஸ்,நெதர்லாந்து,கிரீஸ்,இங்கிலாந்து, டென்மார்க்,ஸ்பெயின்,சுவீடன் போட்டியை நடத்தும் நாடுகள் என்ற வகையில் போலந்து,உக்ரேன் அணிகளும் யூரோவுக்கு தகுதி பெற்று விட்டன. மொத்தம் உள்ள 16 இடங்களில் 12 அணிகள் தகுதி பெற்று விட்ட நிலையில் மீதியுள்ள 4 இடங்களும் பிளே-ஆப் ஆட்டங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.பிளே-ஆப் போட்டிக்கு நெதர்லாந்தும்,சுவீடனும் இடம் பெற்ற 'ஈ'பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளில் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் மோத உள்ளன. 
பிளே-ஆப் விளையாடும் அணிகள்
--------------------------------------
  துருக்கி, அயர்லாந்து,எஸ்டோனியா,போஸ்னியா, குரோஷியா,மான்டீகுரோ,போர்ச்சுகல், செக் குடியரசு ஆகிய நாடுகள் பிளே-ஆப் ஆட்டத்தில் விளையாட வேண்டும்.பிளே-ஆப் ஆட்டத்தில் யார் யாருடன் மோத வேண்டும் என்பது குலுக்கல் முறையில் அக்டோபர் 13ந் தேதி தேர்வு செய்யப்படும். நவம்பர் 11 மற்றும் 13ந் தேதிகளில் முதல் லெக் பிளே-ஆப் ஆட்டம் நடைபெறும்.அதை தொடர்ந்து நவம்பர் 15ந் தேதி 2வது லெக் பிளே-ஆப் ஆட்டம் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளது.
 ஐரோப்பாவின் முன்னணி அணிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் மட்டுமே யூரோ 2012 போட்டிக்கு இன்னமும் தகுதி பெறவில்லை.கடைசியாக டென்மார்க் அணியுடன் மோதிய ஆட்டத்தில் 2-1 என்று தோல்வி கண்டு பிளே-ஆப் விளையாடும் நிலைக்கு போர்ச்சுகல் தள்ளப்பட்டது.பிளே-ஆப் ஆட்டத்திலும் அயர்லாந்து,துருக்கி குரோஷியா,செக் குடியரசு போன்ற பலம் வாய்ந்த நாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தால் போர்ச்சுகலின் யூரோ கனவு சிதைந்து போக வாய்ப்பு உள்ளது.மேலும் சுவிட்சர்லாந்து,பெல்ஜியம்,ஸ்காட்லாந்து போன்ற முன்னணி அணிகளும் யூரோ பிளே-ஆப் ஆட்டத்திற்கு கூட தகுதி பெறவில்லை.

கருத்துகள் இல்லை: