22 மே, 2011


அரைஇறுதிக்கு சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை தகுதி: டெல்லி அணிக்கு கடைசி இடம்


அரைஇறுதிக்கு சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை தகுதி: டெல்லி அணிக்கு கடைசி இடம்
சென்னை, மே. 22- 
 
4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றன. ஏற்கனவே உள்ள 8 அணிகளோடு இந்த முறை புதிதாக புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய 2 அணிகள் பங்கேற்று விளையாடின.  
 
“லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இன்றுடன் “லீக்” ஆட்டம் முடிகிறது. ஆனால் நேற்றைய போட்டி முடிவிலேயே தெரிந்துவிட்டன.
 
டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.  
 
கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தையும், வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 13 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தையும் பிடித்தன. டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் தலா 12 புள்ளியுடன் உள்ளன. இதில் ரன் ரேட்டில் முன்னிலை பெற்றதால் டெக்கான் 7-வது இடத்தையும், கொச்சி 8-வது இடத்தையும் பிடித்தன.
 
புனே, டெல்லி அணிகள் தலா 9 புள்ளியுடன் இருந்தன. ரன்ரேட் அடிப்படையில் புனே 9-வது இடத்தைப் பிடித்தது. டெல்லி அணி கடைசி இடத்தை பிடித்தது.  
 
இந்த முறை அரை இறுதி சுற்று “பிளே ஆப்” முறையில் நடத்தப்படுகிறது. “லீக்” முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு ஒரே மாதிரியான வாய்ப்பு இல்லை. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்கும் வகையில் “பிளே ஆப்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
முதல் இடத்தையும், 2-வது இடத்தையும் பிடிக்கும் அணி மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு முடிந்து விடவில்லை. அந்த அணி, 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு நுழையும் மற்றொரு அணியாகும்.
 
 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் ஆட்டத்தில் தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

கருத்துகள் இல்லை: