19 நவ., 2023

 

 11 வீரர்கள் அல்ல 11 ஹீரோக்கள் - ஆஸி.க்குப் பதிலடி கொடுக்குமா மென் இன் ப்ளூ?!

Ind Vs Aus

இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக ஆடப்போகும் 11 வீரர்களும் இதுவரை அணியின் வெற்றிக்கு எப்படிப் பங்களித்திருக்கிறார்கள், இறுதிப்போட்டியில் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றிய விரிவான அலசல் இங்கே.

உலகக்கோப்பையில் இந்திய அணியின் பயணம் இதுவரை உத்வேகமிக்கதாக அமைந்திருக்கிறது. அவர்கள் மீதான விமர்சனங்களையெல்லாம் உடைத்தெறிந்து புது தெம்போடு சிறப்பாக ஆடி இறுதி கோட்டை எட்டியிருக்கின்றனர். இத்தனை நாள் எதிர்கொண்ட சவால்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை எனச் சொல்லுமளவுக்கு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மாபெரும் சவாலை எதிர்கொள்ளவிருக்கிறது இந்திய அணி.

இந்தச் சமயத்தில் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக ஆடப்போகும் 11 வீரர்களும் இதுவரை அணியின் வெற்றிக்கு எப்படிப் பங்களித்திருக்கிறார்கள், இறுதிப்போட்டியில் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றிய விரிவான அலசல் இங்கே.

ரோஹித் சர்மா:

"நாளை இந்திய நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் கோலியின் பெயராலும் ஷமியின் பெயராலும் நிரம்பியிருக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையின் ரியல் ஹீரோ ரோஹித் சர்மாதான்!" என நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்குப் பிறகு முன்னாள் இங்கிலாந்து வீரர் நாஸிர் ஹூசைன் பேசியிருந்தார். நாஸிர் ஹூசைனின் வார்த்தைகளில் கடுகளவும் மிகையில்லை. நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய ட்ரம்ப் கார்டு ஓப்பனர் ரோஹித் சர்மாவே! முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேயில் எவ்வளவு அதிகமாக ரன்கள் அடிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக ரன்கள் அடிப்பதை மட்டுமே தன்னுடைய வேலையாக வைத்திருக்கிறார்.

Rohit Sharma
Rohit Sharma
நீண்ட இன்னிங்ஸ்களை ஆடவெல்லாம் அவர் விரும்புவதே இல்லை. 20-30 பந்துகளில் அதிரடியாக பாசிட்டிவ்வான தொடக்கத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். அதுதான் ஒட்டுமொத்த இந்திய அணிக்குமே பெரிய உத்வேகத்தைக் கொடுக்கிறது.
Rohit Sharma
Rohit Sharma

கடந்த உலகக்கோப்பையில் ரோஹித் 5 சதங்களுடன் 648 ரன்களை அடித்திருந்தார். இந்த உலகக்கோப்பையில் ஒரே ஒரு சதத்தைத்தான் அடித்திருக்கிறார். ஆனாலும் 550 ரன்களை அடித்திருக்கிறார். கடந்த முறை 500 ரன்களை அடிக்க 527 பந்துகளை எடுத்துக் கொண்ட ரோஹித், இந்த முறை 500 ரன்களை 406 பந்துகளிலேயே எட்டிவிட்டார். தனிப்பட்ட ரெக்கார்டுகளை துளிகூட மனதில் ஏற்றிக்கொள்ளாமல் அதிரடி காட்டுகிறார். அடித்திருக்கும் 550 ரன்களில் 416 ரன்களை பவுண்டரி, சிக்ஸர்களில் மட்டுமே அடித்திருக்கிறார். அதாவது 75% ரன்கள் எல்லைக்கோட்டை கடந்து மட்டுமே வந்திருக்கிறது. ரோஹித்தைப் பொறுத்தவரைக்கும் அவர் அவருடைய பணி என்ன என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்த 20-30 பந்துகளில் அடித்து வெளுப்பதில் மட்டும்தான் நாளை ரோஹித் குறியாக இருக்கப்போகிறார். எல்லாம் நல்லபடியாக அமைந்தால் ரோஹித்தின் பேட்டிலிருந்து ஒரு வாணவேடிக்கையை நாளை பார்க்கலாம்.

சுப்மன் கில்:

இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக அதிக எதிர்பார்ப்பு கில்லின் மீதுதான் இருந்தது. இது அவரின் உலகக்கோப்பையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலைமை அப்படியில்லை. தொடக்கத்திலேயே கில் கொரோனா காரணமாக சில போட்டிகளைத் தவறவிட, அதன்பிறகு அணிக்குள் வந்தவருக்கு வேகம்பிடிக்க சில போட்டிகள் ஆனது. ஆனாலும் போகப் போக அவரின் வழக்கமான ரிதத்திற்கு வந்துவிட்டார். வான்கடேவில் நடந்த இரண்டு போட்டிகளிலுமே கில் கலக்கியிருக்கிறார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 92 ரன்களை அடித்து சதத்தைத் தவறவிட்டிருந்தார்.

Gill
Gill
நியூசிலாந்துக்கு எதிராக வான்கடேவில் நடந்த அரையிறுதியில் கால் பிடிப்போடு டிரெஸ்ஸிங் ரூம் சென்று மீண்டும் வந்து ஆடி 80 ரன்களைச் சேர்த்திருந்தார். "ரோஹித்துடன் ஆடும்போது நான் ஒன்றுமே செய்ய வேண்டாம். அவரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்" என கில் பேசியிருக்கிறார்.

நாளையும் கில் இதே மோடில் இருந்தால் போதும். ரோஹித் ஆடும் வரைக்கும் அவருக்கு செகண்ட் ஃபிடிலாக விக்கெட் விடாமல் ஆடினால் போதும். ரோஹித் தனது அதிரடியை முடித்த பிறகு கோலியுடன் இணைந்து கில் வேகம் கூட்டினால் போதும். அதாவது வான்கடேவில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியதைப் போல ஆடினால் போதும். அவரிடமிருந்து இந்த உலகக்கோப்பைக்கான இன்னிங்ஸ் இதுதான் என சொல்லுமளவுக்கு ஒரு இன்னிங்ஸ் வரவில்லை. அது இந்த இறுதிப்போட்டியில் வந்தால் அணிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்.

விராட் கோலி:

சந்தேகமே வேண்டாம், இது விராட் கோலியின் உலகக்கோப்பைதான். சச்சினின் சாதனையை முறியடித்துவிட்டார். ஓடிஐ-க்களில் அதிக சதம் அடித்திருக்கும் வீரர் இவர்தான். உலகக்கோப்பையின் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்திருக்கும் வீரரும் இவர்தான். இந்த உலகக்கோப்பையின் தொடர்நாயகன் விருதைக் கையிலேந்த அத்தனை சாத்தியங்களும் இருக்கக்கூடிய வீரர்.

Virat Kohli
Virat Kohli
அணியின் முதுகெலும்பாக இந்தத் தொடர் முழுவதும் தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆடியிருப்பதே 10 போட்டிகள்தான். இந்த 10 போட்டிகளில் 5 அரைசதங்களும் 3 சதங்களும் அடக்கம். அதாவது, 10 க்கு 8 போட்டிகளில் வெற்றிகரமாகச் சிறப்பாக ஆடியிருக்கிறார்.
Virat Kohli
Virat Kohli

ரோஹித் அந்த முதல் 10 ஓவர்களில் கொடுக்கும் அதிரடி தொடக்கத்தின் வழி நின்று பார்ட்னர்ஷிப்களை அமைத்து அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்திவிடுவதுதான் கோலியின் வேலை. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியை பெரிய வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றி வெல்ல வைத்திருந்தார். கோலியிடமிருந்து தேவைப்படுவது ஒரு நல்ல நிறைவான இன்னிங்ஸ் மட்டும்தான். அதை அவர் கொடுப்பார் என 100% நம்பலாம்.

ஸ்ரேயாஸ் ஐயர்:

நடப்பு உலகக்கோப்பைக்குள் நிகழ்ந்த பெரிய சர்ப்ரைஸ் ஸ்ரேயாஸ் ஐயர். முதல் பாதியில் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஆடவே இல்லை. அணியில் அவரின் இடமே கேள்விக்குறியாகத்தான் இருந்தது. ஆனாலும் அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகளை வழங்கியது. அதன் பலனை ஸ்ரேயாஸ் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக சில போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார். அவரின் பலமே ஸ்பின்னர்களை எதிர்கொள்வதுதான். அதைக் கச்சிதமாக இந்த முறையும் செய்து முடித்திருக்கிறார். மிடில் ஓவர்களில் அதிரடியாக பெரிய பெரிய சிக்ஸர்களைப் பறக்கவிட்டிருக்கிறார்.

Shreyas Iyer
Shreyas Iyer
இந்த உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்களின் பட்டியலில் ரோஹித் முதல் இடத்தில் இருக்க, 24 சிக்சர்களுடன் ஸ்ரேயாஸ் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஆடம் ஜாம்பாவை எதிர்கொள்ள ஸ்ரேயாஸ் பெரும் ஆயுதமாக இருப்பார். ஹெட் மற்றும் மேக்ஸ்வெல்லின் பந்துகளையும் பறக்கவிடக்கூடும். நெதர்லாந்துக்கு எதிராகவும் நியூசிலாந்துக்கு எதிராகவும் 120+ ஸ்ட்ரைக் ரேட்டில் சதமடித்திருக்கிறார். இதே வேகத்தை இறுதிப்போட்டியிலும் எதிர்பார்க்கலாம். "எனக்கு ஷார்ட் பால் ஆட தெரியாதா?" என ஆவேசமாக கேள்வி கேட்டாலும் அவர் ஷார்ட் பாலில் திணறுகிறார் என்பதுதான் உண்மை. அதில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

கே.எல்.ராகுல்:

இந்திய அணியின் பெரிய நம்பிக்கைகளில் ஒருவராக ராகுல் மிளிர்ந்து வருகிறார். சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு அணியின் தேவையை உணர்ந்து ஆடுகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியிலேயே சறுக்கலிலிருந்த இந்திய அணியை கோலியுடன் சேர்த்து மீட்டு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருந்தார். நம்பர் 5-ல் இறங்குவதால் பல போட்டிகளில் இவருக்குக் குறைவான ஆட்டநேரமே கிடைக்கிறது. ஆனாலும் கிடைக்கிற நேரத்தில் அணிக்குத் தேவையானதை செய்து கொடுத்து அசத்திவிடுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் கடைசி நேரத்தில் களமிறங்கி ஏறக்குறைய 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 39 ரன்களை அடித்து அதகளப்படுத்தியிருந்தார். ராகுலின் ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் எதிர்பார்ப்பதை விட 20-30 ரன்கள் அதிகரித்துவிடுகிறது.

KL Rahul
KL Rahul
பேட்டிங் மட்டுமில்லை. கீப்பிங்கிலும் கில்லியாக கலக்குகிறார். புலிப்பாய்ச்சல்களை நிகழ்த்தி அசாத்தியமான கேட்ச்களை பிடித்து வருகிறார். இதுவரை மட்டும் 14 கேட்ச்சுகளையும் ஒரு ஸ்டம்பிங்கையும் செய்திருக்கிறார். ரிவியூ எடுப்பதிலும் ரோஹித்திற்குப் பெரும்பலமாக இருக்கிறார். ரிவியூ செல்லலாமா வேண்டாமா என்பதில் ராகுல் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியாக இருக்கின்றன.

பல முக்கியமான தருணங்களில் தனது சமயோஜித புத்தி மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார். இறுதிப்போட்டியின் முக்கிய தருணங்கள் எந்த அணிக்கு சாதகமாகச் செல்லப்போகிறது என்பதைத் தீர்மானிப்பதில் ராகுல் முக்கிய வீரராக இருப்பார்.

சூர்யகுமார் யாதவ்:

ஹர்திக் பாண்டியாவின் காயத்தால் மட்டுமே சூர்யகுமார் யாதவ்வுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சூர்யா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இக்கட்டான சூழலில் 47 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்தார். அந்த மாதிரியான இன்னிங்ஸ்கள்தான் சூர்யாவிடமிருந்து தேவைப்படுகின்றன. சூர்யா திறன்மிக்கவர். படபடவென பட்டாசாக வெடித்து முடிப்பது மாதிரியான இன்னிங்ஸ்களை அவரால் ஆட முடியும். இறுதிப்போட்டியில் அதைச் செய்வார் எனும் நம்பிக்கை இருக்கிறது. பேட்டிங்கைக் கடந்து ஃபீல்டிங்கில் இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையாக இருக்கிறார். அரையிறுதியில் போட்டியின் திருப்புமுனையாக அமைந்த வில்லியம்சனின் கேட்ச்சை அவர்தான் கச்சிதமாக பிடித்திருந்தார்.

Suryakumar Yadav
Suryakumar Yadav
SKY
ஆக, சூர்யா இந்த முக்கியமான கட்டத்தில் கொஞ்சம் பேட்டிங் மட்டும் ஆடிவிட்டால் அவர் மீதிருக்கும் விமர்சனங்கள் எல்லாம் அப்படியே பறந்துபோய்விடும்.

ரவீந்திர ஜடேஜா:

ஸ்பின்னர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது ஜடேஜாதான். 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமியும் ரொம்பவே குறைவுதான். 3.6 ரன்களைத்தான் சராசரியாக ஒரு ஓவருக்கு வழங்குகிறார். சேப்பாக்கத்தில் தொடங்கி நடப்பு உலகக்கோப்பையின் முக்கியமான போட்டிகளின் முக்கியமான தருணங்களிலெல்லாம் பெரிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் லபுஷேன், ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆக, நாளை ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் அந்த மிடில் ஓவர்களில் பெரிய ட்ரம்ப் கார்டாக இருக்கப்போகிறார்.

Jadeja
Jadeja
இறுதிக்கட்ட ஓவர்களில் வேகமாக ஆடிக்கொடுக்க வேண்டிய பொறுப்பும் ஜடேஜாவுக்கு இருக்கிறது. சேஸிங்கில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் ஆபத்பாந்தவனாக உருவெடுக்க வேண்டிய பொறுப்பு ஜடேஜாவிற்கு இருக்கிறது.

குல்தீப் யாதவ்:

குல்தீப் யாதவ் நடப்பு உலகக்கோப்பையில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அஷ்வின் மாதிரியான ஒரு சீனியர் வீரர் பென்ச்சிலேயே இருக்கிறார். ஆனால், அவரை லெவனில் எடுக்கலாமா எனும் எண்ணம் கொஞ்சம் கூட வராத அளவுக்கு குல்தீப் மிகச்சிறப்பாக வீசி வருகிறார். ஷமி ருத்ரதாண்டவம் எடுத்து இருக்கிற அத்தனை விக்கெட்டுகளையும் அள்ளிச் சென்றுவிடுவதால் குல்தீப் விக்கெட்டுகள் எடுக்காததை போல இருக்கிறது. ஆனால், தேவை ஏற்படும்பட்சத்தில் அவரும் விக்கெட்டுகளை அள்ளி எடுப்பார், முக்கியமாக பேட்டர்களுக்கு நெருக்கடி தருவார் என்பதில் சந்தேகமே தேவையில்லை.

Kuldeep Yadav
Kuldeep Yadav
எதிரணியின் பேட்டர்களும் குல்தீப்பைப் பெரும்பாலும் ஜாக்கிரதை உணர்வுடன் தற்காப்பாகத்தான் எதிர்கொள்கின்றனர்.

ஜஸ்பிரித் பும்ரா

அவர் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற இந்திய அணியின் நம்பிக்கையை முழுமையாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் பும்ரா. பேட்டர்களை நிலைகுலைய வைக்கும் வகையிலான சூட்சமம் மிக்க பந்துகளை வீசி எதிரணிகளைத் திணறடித்து வருகிறார். மொத்தம் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

Bumrah
Bumrah
இதில் பவர்ப்ளேயில் 5 விக்கெட்டுகளும் மிடில் ஓவர்களில் 4 விக்கெட்டுகளும் கடைசி 10 ஓவர்களில் 9 விக்கெட்டுகளும் அடக்கம். எக்கானமி ரேட்டும் 3.79தான் வைத்திருக்கிறார்.

மொத்தம் 335 டாட் பந்துகளை வேறு வீசியிருக்கிறார். நடப்பு உலகக்கோப்பையில் அதிக டாட் பந்துகளை வீசியிருக்கும் வீரர் பும்ராதான். இதன்மூலம் பேட்ஸ்மேன்களின் மீது அழுத்தம் ஏற்றி மறுமுனையில் விக்கெட்டுகள் விழவும் காரணமாக இருக்கிறார். இறுதிப்போட்டியிலும் பும்ராவின் இதே பணி இப்படியே தொடர வேண்டும்.

முகமது ஷமி:

பேட்டிங்கில் விராட் கோலி ஹீரோவென்றால் பௌலிங்கில் முகமது ஷமிதான் இந்தியாவின் ஹீரோ. விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். ஆறே ஆறு போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். அதற்குள் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 3 முறை 5 விக்கெட் ஹால்களை எடுத்திருக்கிறார். அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் வீழ்த்திய 7 விக்கெட்டுகளுக்கெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தனி ஆளாக நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருந்தார். ஒரு பௌலர் தனி ஆளாக ஒரு போட்டியின் போக்கையும் முடிவையும் தீர்மானிப்பதை பார்த்தே நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. அணியின் முதல் வாய்ப்பாக கூட பார்க்கப்படாமல் பென்ச்சிலேயே பல போட்டிகளாக வைக்கப்பட்டு வேறு வழியே இல்லையெனும் போது வாய்ப்பைப் பெற்ற ஒரு வீரர் இப்படி செயல்படுவதை பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது.

Shami
Shami
1983-ல் கபில்தேவ் பிடித்த கேட்ச்சை போல 2011 இல் தோனி அடித்த சிக்ஸரைப் போல இந்த இறுதிப்போட்டியில் ஒரு பிரதான சம்பவம் ஷமியால் நிகழ்த்தப்பட வேண்டும். ஷமியின் செயல்பாட்டுக்கெல்லாம் கிரீடம் சூட்டியதை போல அந்தத் தருணம் அமைந்து காலத்துக்கும் பேசப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

முகமது சிராஜ்:

சிராஜ் இந்த உலகக்கோப்பையில் 13 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தியிருக்கிறார். பும்ரா, ஷமி, குல்தீப் என மற்ற பௌலர்களெல்லாம் தூண் போல இருக்கக் கொஞ்சம் சௌகரியமாக ரன் எடுக்கும் வாய்ப்பாக சிராஜின் ஓவர்களையே பார்க்கின்றனர் எதிரணியினர். அதனால்தான் சிராஜ் கொஞ்சம் அடி வாங்குகிறார். ஆனாலும் ஆங்காங்கே சிறப்பான விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். உதாரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் வீழ்த்திய 2 விக்கெட்டுகளைக் குறிப்பிடலாம். அப்துல்லா ஷபீக், பாபர் அசாம் என இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இரண்டுமே முக்கியமான விக்கெட்டுகள். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியவை. அப்படியான செயல்பாட்டைத்தான் நாளை சிராஜிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Siraj | IND vs PAK
Siraj | IND vs PAK

வேறெந்த காலத்திய இந்திய அணியை விடவும் இந்த அணி ஆதிக்கமிக்கதாகத் தெரிகிறது. இந்த அணியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் மேட்ச் வின்னர்களாக இருக்கிறார்கள். சிராஜூம் சூர்யாவும் இறுதிப்போட்டியில் ஓர் அழுத்தமான ஆட்டத்தைக் கொடுத்துவிட்டால் அவர்களையும் தயக்கமின்றி மேட்ச் வின்னர்களின் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

ஒரு உலகக்கோப்பை என்பது ஒரு தேசத்திற்கான உத்வேகம். கிரிக்கெட்டின் வருங்காலத்திற்கான நம்பிக்கை. ஆனால், அது அத்தனை எளிதில் கைகூடிவிடாது. 2011-க்குப் பிறகு இறுதிக்கோட்டை எட்ட இந்திய அணிக்கு 12 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. இந்தக் காத்திருப்புக்கான நல்ல விடையாக நாளைய நாள் அமைய வேண்டும். அந்த நம்பிக்கையை இந்த அணி கொடுக்கிறது. ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம்!

கருத்துகள் இல்லை: