24 மே, 2011


'பிபா'தலைவர் தேர்தல்: ஜோசப் பிளேட்டர் மீண்டும் போட்டியிடுகிறார்

பிளேட்டருடன் முகமது பின் ஹமாம்
 'பிபா' தலைவருக்கான தேர்தலில் ஜோசப் பிளேட்டர் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஆசிய கால்பந்து சம்மேளனத் தலைவர் முகமது பின் ஹமாம் தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார்.
 உலக கால்பந்து சம்மேளனமான 'பிபா'வில் தொடர்ந்து 3 முறை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜோசப் பிளேட்டர் தலைவராக உள்ளார்.அதாவது 13 ஆண்டுகாலம் 216 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட உலகின் மிகப் பெரிய அமைப்பான 'பிபா'வின் தலைவராக ஜோசப் பிளேட்டர் கோலோச்சுகிறார்.அவரது பதவி காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க ஜுன் 1ந் தேதி 'பிபா' காங்கிரஸ் கூடுகிறது.தொடர்ந்து இந்த முறையும் 4வது தடவையாக ஜோசப் பிளேட்டர் தேர்தலில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஆசிய கால்பந்து சம்மேளனத் தலைவர் முகமது பின் ஹமாம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.தற்போது 61 வயது நிரம்பிய முகமது பின் ஹமாம் கத்தார் நாட்டை சேர்ந்தவர். வருகிற 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகத்தாரில் நடக்க உள்ளது.இந்த வாய்ப்பை கத்தார் பெறுவதற்கு முகமது பின் ஹமாம்தான் முக்கிய காரணம்.
 ஜோசப் பிளேட்டர் எதிர்த்து முகமது பின் ஹமாம் களம் இறங்கும்பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கம் எனத் தெரிகிறது. இதனால் பிளேட்டர் போட்டியை தவிர்க்க முயன்று வருகிறார்.தற்போது ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜோசப் பிளேட்டர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. குட்டி நாடான கிழக்கு தைமூருக்கு சென்ற  பிளேட்டர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிளேட்டர், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் ஆனால் இதுதான் கடைசி முறை என்றும் கூறினார்.
 தொடர்ந்து மலேசியா சென்ற அவர் அங்கு வைத்து முகமது பின் ஹமாமை சந்திக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.ஆனால் பல்வேறு காரணங்களால் அவரை சந்திக்கும் வாய்ப்பு கைகூடவில்லை. இதற்கிடையே கடந்த வெள்ளியன்று தோகாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முகமது பின் ஹமாம் 'பிபா' தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்தார்.
 

கருத்துகள் இல்லை: