12 ஜூலை, 2015

கிரிக்கெட்: இந்தியாவையடுத்து தென்ஆப்பிரிக்காவையும் புரட்டியெடுத்த வங்காள தேசம்

கிரிக்கெட்: இந்தியாவையடுத்து தென்ஆப்பிரிக்காவையும் புரட்டியெடுத்த வங்காள தேசம்


வங்காள தேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று மிர்புர் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 162 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் டு பிளிசிஸ் அதிகபட்சமாக 41 ரன்களும், பெஹார்டியன் 36 ரன்களும் சேர்த்தனர்.

வங்காள தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிஸ்தாபிஜூர் ரஹ்மான், சுழற்பந்து வீச்சாளர் நசீர் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசத்தின தமீம் இக்பால், சவுமியா சர்கார் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமீம் இக்பால் 5 ரன்னுடனும், அடுத்து வந்த லிட்டான் தாஸ் 17 ரன்னுடனும் பெவிலியின் திரும்பினர். இவர்கள் இருவரது விக்கெட்டையும் கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா வீழ்த்தினார்.

3-வது விக்கெட்டுக்கு சவுமியா சர்கார் உடன் மெக்முதுல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை விளாசித் தள்ளியது. குறிப்பாக சவுமியாக சர்கார் அதிரடியாக விளையாடினார். அவர் 47 பந்தில் அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் விளையாடிய மெக்முதுல்லா அரைசதம் அடித்து அவுட் ஆனார். அதன்பின் சாஹிப் அல் ஹசன் களம் இறங்கினார்.

28-வது ஓவரின் 4-வது பந்தை சவுமயா சர்கார் சிக்சருக்கு தூக்கி வங்காள தேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அந்த அணி 27.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. சவுமியா சர்கார் 88 ரன்களுடனும், சாஹிப் அல் ஹசன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

8 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய நசீர் ஹொசைன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்படடார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 15-ந்தேதி நடைபெறும் கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

சமீபத்தில் இந்தியாவை வங்காள தேசம் 2-1 என வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: