7 ஆக., 2017

உசைன் போல்ட்

உசைன் போல்ட்
!தடகளப் போட்டியின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவரான உசைன் போல்ட், லண்டன் உலக சாம்பியன்ஷிப் தடகளப்
போட்டியுடன் ஓய்வுபெற்றார். வரும் 21-ம் தேதியுடன் தனது 31-வது வயதை எட்டும் உசைன் போல்ட், இந்த அறிவிப்பை போன வருடம் வெளியிட்டார். `மின்னல் மனிதன்' உசைன் போல்ட் பற்றிய சிறிய அலசல்...
1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, உசைன் போல்ட் பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் ஆர்வம்காட்டிய உசைன் போல்ட், தனது 15-வது வயதில் தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். கரிஃப்டா விளையாட்டுகளில் ஜமைக்கா சார்பில் முதல்முறையாகப் போட்டியிட்டு, 400 மீட்டர் ஓட்டத்தில் தனது அப்போதைய சிறந்த ஓட்டத்தை (48.28 நொடியில்) நிகழ்த்தி, வெள்ளிப்பதக்கம் வென்றார். அந்தப் போட்டியின் 200 மீட்டர் பந்தயத்திலும் 21.81 நொடியில் ஓடி, வெள்ளிப்பதக்கம் வென்றார். ஹங்கேரியில் அதே ஆண்டில் (2001) நடைபெற்ற `உலக இளையோர் தடகளப் போட்டி'யில் பங்கேற்று உலக அரங்கில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.  அந்தப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாவிட்டாலும், தனது அப்போதைய சிறந்த ஓட்ட நேரமாக 21.73 நொடியைப் பதிவுசெய்தார். தன் சொந்த ஊரான கிங்ஸ்டனில் நடைபெற்ற 2002-ம் ஆண்டுக்கான உலக இளையோர் தடகளப் போட்டிகள் மூலம், தன் சொந்த மக்கள் முன்னிலையில் 200 மீட்டர் ஓட்டத்தை 20.61 நொடியில் கடந்து வெற்றிபெற்றார். இளையோர் போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர்களுள், போல்ட்டின் வெற்றியே இதுவரை தங்கம் வென்றவருள் மிக இளம் வயதில் நிகழ்த்திய வெற்றி. அதே தடகளப் போட்டியில் ஜமைக்க தொடர் ஓட்ட அணியில் பங்கேற்று 4×100 மீட்டர் மற்றும் 4×400 மீட்டர் பந்தயங்களில் முறையே 36.15 நொடி  மற்றும் 3:04.06 நிமிடத்தில் ஓடி, வெள்ளிப்பதக்கங்களை வென்றார். மேலும், 2003-ம் ஆண்டு நடைபெற்ற கரிஃப்டா தடகளப் போட்டி மற்றும் உலக இளையோர் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார்..
மே 31, 2008-ம் ஆண்டில் நியூயார்க் நகரின் ஐகேன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ரீபாக் கிராண்ட் ப்ரீலீக்கில், 9.72 நொடியில் 100 மீட்டர் ஓடி புதிய உலகசாதனை படைத்தார் போல்ட்.
உசைன் போல்டை உலகம் முழுவதும் நாயகனாகிய அந்தத் தருணம், 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி. ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் 9.69 நொடியில் ஓடி, தனது சாதனையையும் முறியடித்து உலக சாதனை படைத்தார். இதை அடுத்து 200 மீட்டர் பந்தயத்தில் 19.30 நொடியில் ஓடி, புதிய உலக சாதனை படைத்தார். இரு தினங்கள் கழித்து நடைபெற்ற 4 × 100 தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஜமைக்க அணியில் மூன்றாம் பகுதியை போல்ட் ஓடி, மூன்றாவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆனால், இந்தத் தொடரில் தன் சகவீரரான நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்ததால் அந்தத் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது..
2009-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 நொடியில் ஓடி, உலக சாதனை படைத்தார். மேலும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பந்தயத்தூரத்தை 19.19 நொடியில் கடந்து மீண்டுமோர் உலக சாதனை படைத்தார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் முன்னதாகவே ஓட்டத்தைத் தொடங்கியதால், பிழையான தொடக்கத்தின் அடிப்படையில் பந்தயத்திலிருந்து நீக்கப்பட்டார்.
உசேன்
2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற `கோல்டன் காலா'  மற்றும்  `உலக சாம்பியன்ஷிப்பில்' 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில்  தங்கம் வென்ற உசைன் போல்ட், உலக தடகளப் போட்டிகளில் தனது ஆதிக்கத்தைக் காட்டினார்.
2015-ம் ஆண்டு பெய்ஜிங் உலகப் போட்டிகளில், மீண்டும் 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்த நூற்றாண்டின் சிறந்த தடகள வீரர் என்று அனைவரும் புகழும்வண்ணம் திகழ்ந்தார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசைக்க முடியாத சாதனைகளைப் படைத்தார். இதன் மூலம் `மூன்று ஒலிம்பிக்கில் தொடர்ந்து தங்கம் வென்ற வீரர்' என்ற பெருமையைப் பெற்றார். இதையடுத்து  கடந்த மாதம் மொனோக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் தங்கம் வென்றார்  உசைன் போல்ட்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த உசைன் போல்ட், தனது விடா முயற்சியால் பல இன்னல்களைக் கடந்து பல சாதனைகளைப் புரிந்தார். முயன்றால் எவரும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு, உசைன் போல்ட் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இவரின் சாதனைகளை கௌரவிக்கும்விதத்தில் IAAF, வருடந்தோறும் வழங்கும் `சிறந்த உலக விளையாட்டு வீரர்' பட்டத்தை 2008, 2009, 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் பெற்றார். கூட்டத்தில் ஒருத்தனாக இருந்து ஆயிரத்தில் ஒருவனாக மாறி, தடகள உலகின் `தங்கமகன்' எனப் போற்றப்படும் உசைன் போல்ட், அனைவருக்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். அவரது சாதனைகள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாத சுவடுகளே!

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Related Tags



Related Tags

கருத்துகள் இல்லை: