19 மார்., 2014


20 ஓவர் கிரிக்கெட் தகுதி சுற்றில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றது.
20 ஓவர் உலக கோப்பை
5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக ‘சூப்பர்–10’ சுற்
றில் (மார்ச் 21–ந் தேதி முதல்) விளையாட உள்ளன. எஞ்சிய இரு இடத்திற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது.
தகுதி சுற்றில் ஆடும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்–10’ சுற்றை எட்டும்.
நெதர்லாந்து 140 ரன்
இந்த நிலையில் தகுதி சுற்றில், சைலெட்டில் (பி பிரிவு) நேற்று நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து–ஜிம்பாப்வே அணிகள் எதிர்கொண்டன. இதில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மைபர் (0) ஸ்வார்ட் (3 ரன்), இருவரும் 2–வது ஓவருக்குள் நடையை கட்டினாலும், டாம் ஹூப்பர் அரைசதம் அடித்து நெதர்லாந்து சவாலான ஸ்கோரை அடைய உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான டாம் ஹூப்பர் 72 ரன்களுடன் (58 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் நின்றார்.
தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணியில் ஹாமில்டன் மசகட்சா (43 ரன்), கேப்டன் பிரன்டன் டெய்லர்(49 ரன்,39 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) நிலைத்து நின்று ஆடினாலும், நெதர்லாந்து பவுலர்கள் நீயா–நானா? என்கிற ரீதியில் கடுமையாக நெருக்கடி அளித்தனர். கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜமில் வீசிய இறுதி ஓவரில் முதல் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து ஜிம்பாப்வே 6 ரன்கள் எடுத்தது.
கடைசி பந்தில் சிக்ஸ்
இதையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்த போது, சிபாண்டா (9 ரன்) அதை சிக்சருக்கு தூக்கியடித்து ஜிம்பாப்வேயின் வெற்றியை உறுதி செய்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி பந்தில் ஒரு அணி வெற்றி காண்பது இது 13–வது நிகழ்வாகும். முந்தைய அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே அணி இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை: