இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்திய அணியில் மூன்று மாற்றமாக விஜய், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நமன் ஓஜா, அஷ்வின், பங்கஜ்சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மூன்று பேருக்கும் இது தான் முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியாகும்.
டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் தில்ஷன், முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார். இதன்படி ஆட்டத்தை தொடங்கிய இந்தியா 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது.
பின்னர் ஆடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் தில்ஷன் 21 ரன்னிலும், தரங்கா 27 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். என்றாலும் 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமால் நிலைத்து நின்று, தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினார்.
புதுமுக வீரரான அவர் அவ்வப்போது பந்தை சிக்சருக்கும் விரட்டினார். இறுதியில் தனது முதலாவது சதத்தையும் நிறைவு செய்தார். அவர் 111 ரன்கள் (118 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்த நிலையில், ஸ்டம்பிங் ஆனார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கபுகேதரா 42 ரன்கள் எடுத்தார்.
இதை தொடர்ந்து ஜீவன் மென்டிஸ் (35 ரன்), சமரவீரா (28 ரன்) ஆகியோரும் சிறப்பாக விளையாட, இலங்கை அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த 5 ஆட்டங்களிலும் 2-வது பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி இறுதிவாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்திய அணி 4 லீக் ஆட்டத்தில் விளையாடி அதில் ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் தழுவியது. இதில் ஜிம்பாப்வேயுடன் அடுத்தடுத்து இரு ஆட்டத்தில் தோற்றதும் அடங்கும்.
தலா 2 வெற்றிகளுடன் உள்ள இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன. வருகிற 9-ந்தேதி இறுதிப்போட்டி நடக்கிறது. அதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் நாளை தங்களது கடைசி லீக்கில் மோத உள்ளன. இதன் முடிவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
முன்னணி வீரர்கள் இல்லாத சுரேஷ் ரெய்னா தலைமையிலான 2-ம் தர அணியான இந்தியா அடுத்து ஜிம்பாப்வேயுடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் (ஜுன் 12 மற்றும் 13-ந்தேதி) விளையாட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக