வீவா சுற்றுக்கிண்ணத்துக்காக எர்பிலில் தமிழீழ அணி
வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டி கடந்த 4ஆம் திகதி எர்பிலில் ஆரம்பமாகியது. போட்டியில் கலந்து கொள்வதற்காக உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் முயற்சியால் தமிழீழம் சார்பாக போட்டியிட தமிழீழ அணி உருவாக்கப்பட்டது.
இவ்வணியில் கனடா, சுவிஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளைச் சேர்ந்த திறமை மிக்க தமிழீழ காற்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகின்றனர். கடந்த 3ஆம் திகதி இவ்வணி எர்பில், குருதிஸ்தானில் கால் பதித்தது.
FIFA சுற்றுக் கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நாடுகளுக்காகவும் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்காகவும் இந்த வீவா சுற்றுக்கிண்ணப் போட்டி இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இவ்வாறான ஒரு சர்வதேசப் போட்டியில் உலக வரலாற்றில் முதன்முறையாக தமிழீழ அணி போட்டியிட்டு வருகன்றது.
வீவா சுற்றுக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 4ஆம் திகதி நடைபெற்றன. இந்நிகழ்வில் போட்டியில் கலந்து கொள்ளும் 9 அணிகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதங்கள் இசைக்கபட்டன.
மற்றைய நாடுகளின் கொடிகளுடன் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தமிழீழத் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. எர்பிலில் பட்டொளி வீசி பறந்த தமிழீழத் தேசியக் கொடி எமக்கான அங்கீகாரத்தை முன்னுறுத்தி நிற்பதை இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்களின் கண்களில் காணக் கூடியதாக இருந்தது.
தமிழீழ அணியின் முதலாவது போட்டி ரேசியா அணிக்கு எதிராக யூன் 5 ஆம் நாள் நடைபெற்றது. மிகவும் சிறப்பாக விளையாடி தாய் மண்ணுக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள் தமிழீழ அணியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்.
தமிழீழ அணி இறுதி வரை ரேசியா அணியுடன் கடுமையாக போட்டியிட்டது. விளையாட்டு நிறைவு பெறுவதற்கு ஐந்து மணித்துளிகள் இருக்கும் நிலையில் ரேசியா அணி ஒரு கோல் அடித்து வெற்றியை தமதாக்கி கொண்டது.
முதன்முறையாக ஒரு சர்வதேச போட்டியில் களமிறங்கிய தமிழீழ அணிக்கு உலகம் எங்கும் வாழும் தமிழீழ மக்கள் அளித்து வரும் ஆதரவு பேஸ்பூக், ருவிட்டர் ஆகிய இணையத்தளங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாதரவே தமிழீழ அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.
தமிழீழ அணிக்கு வாழ்த்துகள்
உலகலாவிய தமிழ் இளையோர் அவை.
உலகலாவிய தமிழ் இளையோர் அவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக