14 நவ., 2013

மும்பை டெஸ்ட்: ரசிகர்கள் ஆரவாரத்துடன் களமிறங்கிய சச்சின்!
மும்பையில்  இன்று நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களம் இறங்கி 38 ரன்களுடன் ஆட்டம் இழக்கமால் உள்ளார். 


முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவு அணி, இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 182 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் போவெல் 48 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.

இந்தியா தரப்பில் ஓஜா 5 விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சமி, புவனேஸ்வர்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க வீரர்கள் தவான்- முரளி விஜய் களம் இறங்கி அபாரமாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 77 ரன் குவித்த இந்த ஜோடியை ஷில்லாங்ஃபோர்டு பிரிந்தார்.


33 ரன்னில் இருந்த தவான், ஷில்லாங்ஃபோர்டு பந்தில் சந்தர்பாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புஜாரா களம் இறங்கிய சிறிது நேரத்தில்  முரளி விஜய் (43) ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டையும் ஷில்லாங்ஃபோர்டு கைப்பற்றினார்.

 களமிறங்கிய சச்சின்...ரசிகர்கள் ஆரவாரம்
இதைத் தொடர்ந்து சச்சின் களம் இறக்கப்பட்டார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் சச்சின், மைதானத்தில் நுழைந்தபோது ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது.
அதனைத் தொடர்ந்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் சச்சின். இந்த ஜோடி நிதானமாக ஆடி, அணியின் ஸ்கோரை 157 ஆக உயர்த்தியது.
சச்சின் (6 பவுண்டரி) 38 ரன்களுடனும், புஜாரா ( 4 பவுண்டரி)  34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: