15 ஜூன், 2011


07th Jun 2011
லயனல் மேசி இந்தியா வருகை; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

 இந்திய கால்பந்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு குறைவு என்றாலும் சர்வதேச கால்பந்துக்கு இந்தியாவில் இருக்கும் வரவேற்பு அபாரமானது.உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை இந்தியாவில் மட்டும் 7 கோடி ரசிகர்கள் டி.வி.யில் பார்த்து ரசித்தே இதற்கு சான்று. அதே வேளையில் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தையும் இதே அளவு ரசிகர்கள்தான்  உலகம் முழுக்க டி.வி.யில் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
 நீண்ட காலம் கழித்து இந்திய கால்பந்துக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்திய ரசிகர்களின் அபிமானம் பெற்ற அர்ஜென்டினா கால்பந்து அணி இந்தியா வருகிறது. இரு முறை 'பிபா பல்லான் டி ஆர்' விருதை பெற்ற பார்சிலோனாவின் லயனல் மேசி,ஜேவியர் மச்சரானோ, மான்செஸ்டர் சிட்டியின் கார்லெஸ் டாவெஸ்,ரியல்மாட்ரிட்டின் ஏஞ்சல் டி மரியா,ஹீகுவான் உள்ளிட்ட புகழ்பெற்ற வீரர்கள் இந்திய மண்ணில் முதல் முறையாக விளையாட உள்ளனர்.
 போட்டி நடைபெறும் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி 70 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.அர்ஜென்டினா& வெனிசூலா அணிகள் கொல்கத்தாவில் மோத உள்ளன என்பதை 'பிபா'அட்டவணை வெளியிட்டவுடன் இந்திய கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கொல்கத்தா,புனே, மும்பை, சென்னை,கொச்சி, கோவா போன்ற நகரங்களில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னமும் டிக்கெட் விற்பனை தொடங்கப்படாவிட்டாலும் எப்போது டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.பெரும்பாலானா ரசிகர்கள் லயனல் மேசியை நேரில் கண்டுவிடவே டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.அந்தளவுக்கு இந்த பார்சிலோனா நட்சத்திரம் இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
 போட்டி நடைபெறும் சால்ட்லேக் மைதானம் உலக கால்பந்து மைதானங்களில் 2வது பெரியது.தற்போது ஸ்டேடியத்தில் புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.இந்த பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று மேற்குவங்க விளையாட்டுத்துறை அமைச்சர் மதன் மித்ரா தெரிவித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை: