15 ஜூன், 2011


 
Share
மேற்கிந்திய தீவுகள் அபாரமான முதல் வெற்றி: இந்தியா படுதோல்வி
வீரகேசரி இணையம்  6/14/2011 10:34:22 AM-இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் தனது முதல் வெற்றியை அபார வெற்றியாக பெற்றதுடன் இந்திய அணிக்கு இப் போட்டி படுதோல்வியாக அமைந்தது.

இவ்விரு அணிகள் மோதிய 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது.

இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று வழக்கம் போல் மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் விளையாட அழைத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களை குவித்தது.

போலார்ட் 72 பந்தில் 70 ஓட்டங்களையும் ( 6 பவுண்டரி, 2 சிக்சர்) தொடக்க வீரர் சிம்மனஸ் 67 ஓட்டங்களையும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பிரவீண்குமார் 3 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஒரு ஓவருக்கு 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான நிலையில் இந்திய அணி களம் இறங்கியது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. குறிப்பாக சுழற்பந்து வீரர் மார்ட்டின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினார்கள்.

இந்திய அணி 39 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட முதல் தோல்வியாகும். ரோகித் சர்மா அதிகபட்சமாக 39 ஓட்டங்களை எடுத்தார். மார்ட்டின் 4 விக்கெட்டும், ரஸ்சல் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மார்ட்டின் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

கருத்துகள் இல்லை: