சாம்பியன்ஸ் லீக்: நடப்பு சாம்பியன் இன்டர்மிலானுக்கு முடிவுகட்டியது சால்கி
சாம்பியன்ஸ் லீக் கால்இறுதி ஆட்டத்தில் இன்டர்மிலானை சால்கி 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இந்த படுதோல்வியால் இன்டர்மிலானின் அரை இறுதி கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நேற்று கால்இறுதி முதல் லெக் ஆட்டங்கள் நடந்தது.மிலானில் உள்ள சான்சிரோ ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் இன்டர்மிலானை எதிர்த்து ஜெர்மனியின் சால்கி களம் இறங்கியது.முதல் நிமிடத்திலேயே இன்டரின் ஸ்டான்கோவிக் கோல் அடிக்க சால்கி ஆடிப் போனது.17வது நிமிடத்தில் சால்கி பதில் கோல் திருப்பியது. மாதீப் இந்த கோலை அடித்தார்.தொடர்ந்து34வது நிமிடத்தில் டீகோ மிலிட்டோ இன்டருக்கான 2வது கோல் அடித்தார். 40வது நிமிடத்தில் சால்கியும் 2வது கோலை அடித்தது. முதல் பாதி ஆட்டம் 2-2 என்று சமநிலையில் முடிந்தது.
பிற்பாதியில் 53வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் கேப்டன் ரால் கன்சாலஸ் ஒரு கோல் அடிக்க சால்கி முன்னிலை பெற்றது. தொடர்ந்து 57வது நிமிடத்தில் இன்டர்மிலானின் ரன்சியோ 'சேம்சைடு' கோல் அடித்தார்.இதனால் இன்டர் வீரர்கள் சோர்ந்து போனார்கள்.மீண்டும் 75வது நிமிடத்தில் ரால் இன்னொரு கோல் அடிக்க, ஆட்ட நேர இறுதியில் சால்கி 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த படுதோல்வியை அடுத்து இன்டர்மிலான் அரை இறுதி போட்டிக்குள் நுழைவது கடினமே. வருகிற 13ந் தேதி ஜெல்சன்கிர்சன் நகரில் 2வது லெக் ஆட்டம் நடைபெற உள்ளது.இதில் இன்டர் குறைந்தது 4-0 என்ற கோல் கணக்கிலாவது சால்கியை தோற்கடிக்க வேண்டும்.இது நடக்காத காரியம் என்றே தோன்றுகிறது. இதனால் நடப்புசாம்பியனின் சாம்பியன்ஸ் லீக் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக