6 ஏப்., 2011


08th Mar 2011
உலக கோப்பை 2014: உலகின் மிகப்பெரிய மரக்கானா ஸ்டேடியம் இடிக்கப்படுகிறது
புதிய மரக்கானா
 உலகின் மிகப் பெரிய கால்பந்து மைதானமான மரக்கானா புணரமைத்து கட்டுவதற்காக இடிக்கப்பட்டது.
 பிரேசிலை போலவே ரியோடி ஜெனிராவில் உள்ள மரக்காணா ஸ்டேடியமும் கால்பந்துக்கு பெரும்புகழ் பெற்றது.கவுண்டமணி பாணியில் ஸ்டேடியங்களுக்கு எல்லாம் ஸ்டேடியம் என்று இதனை சொல்லலாம். கால்பந்தின் தாய்வீடு என்றும் மரக்கானாவை அழைக்கலாம்.1948ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் 1950ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 2 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டது.
 1950 ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மரக்கானாவில் நடந்தது.இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி உருகுவேயை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியை 1,99,854 ரசிகர்கள் நேரில் பார்த்தனர்.இந்த சாதனை இன்னமும் முறியடிக்கப்படவில்லை.அதற்காக வாய்ப்பு இனிமேலும் ஏற்படப் போவது இல்லை. ஏனென்றால் பிரமாண்ட ஸ்டேடியங்கள் எல்லாம் புணரமைத்து கட்டப்பட்டு வருகின்றன.
 பாதுகாப்பு காரணங்களுக்காக மரக்காணாவின் இருக்கை அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. தற்போது 1 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் உள்ள மரக்காணா, 2014ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக இடித்து மீண்டும் புணரமைத்து கட்டப்பட உள்ளது.மரக்கானாவின் இருக்கை எண்ணிக்கை 82 ஆயிரத்து 238 ஆக குறைக்கப்படவும் உள்ளது. 8 கட்டுமான நிறுவனங்கள் இணைந்து புணரமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளன. இதற்காக ஸ்டேடியத்தினை இடிக்கும் பணிகள் தொடங்கி விட்டன. வருகிற 2013ம் ஆண்டுக்குள் மரக்காணா புதுப்பொலிவுடன் தயராகி விடும்.
 2014ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் தொடக்க விழா மற்றும் இறுதி ஆட்டம் மரக்காணாவில்தான் நடக்க உள்ளது. அது மட்டுமல்ல 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் துவக்கவிழா,நிறைவு விழா போன்றவை இங்குதான் நடக்க உள்ளது. இதனால் உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் மற்றும் ஒலிம்பிக் போட்டி நடந்த ஸ்டேடியங்கள் வரிசையில் மரக்காணாவும் இடம்பெறப் போகிறது.
 இதற்கு முன் லண்டன் வெம்ப்ளி,பாரீஸ்,ரோம்,மியூனிச்,பெர்லின் நகரங்களில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியங்கள் இத்தகைய அரிய பெருமையை பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை: