6 ஏப்., 2011


'பிபா' தலைவர் தேர்தல்: முகமது பின் ஹமாமுக்கு தென் கொரியா ஆதரவு
 'பிபா' தலைவர் தேர்தலில் ஜோசப் பிளேட்டரை எதிர்த்து போட்டியிடும் ஆசியரான முகமது பின் ஹமாமுக்கு தென் கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.
 'பிபா' தலைவருக்கான தேர்தல் வருகிற ஜுன் 1ந் தேதி சூரிச்சில் நடைபெற உள்ளது.தற்போதைய தலைவரான சுவிட்சர்லாந்தின் ஜோசப் பிளேட்டர் 4வது முறையாக மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து களம் இறங்குவது கத்தார் நாட்டை சேர்ந்த முகமது பின் ஹமாம். இவர் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஆவார்.
 இந்த நிலையில் ஆசியர் என்ற வகையில் முகமது பின் ஹமாமுக்கு தென்கொரியா ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.இது குறித்து தென்கொரிய கால்பந்து சங்கத்தின் கவுரவத் தலைவர் சங் மாங் ஜீன் கூறுகையில், ''ஜோசப் பிளேட்டர் பொது செயலர், தலைவர் என்று சுமார் 30 ஆண்டு காலம் 'பிபா'வில் பணியாற்றி விட்டார்.அவருக்கு ஒய்வளிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. 'பிபா'வில் அவருக்கு அவ்வளவாக நல்ல பெயர் இல்லை.ஆசியர்களால் 'பிபா'வை திறம்பட நிர்வகிக்க முடியாது என்று கூறுவது ஏற்புடையதல்ல. முகமது பின் ஹமாம் 'பிபா' தலைவருக்கு ஏற்றவர்'' என்றார்.
 'பிபா' செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை 24ல் இருந்து 41 உயர்த்துவது உள்ளிட்ட சில வாக்குறுதிகளை முகமது பின் ஹமாம் அளித்துள்ளார். அதே வேளையில் கோல்லைன் டெக்னாலஜி 2014ம் ஆண்டு உலக கோப்பையில் அறிமுகப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை ஜோசப் பிளேட்டர் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: