20 அக்., 2010

20th Oct 2010
ஒட்டுக்கு லஞ்சம் கேட்ட செயற்குழு உறுப்பினர்கள் மீது 'பிபா' விசாரணை
உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்கும் நாடுகளிடம் ஆதரவான ஓட்டளிக்க லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 'பிபா'வின் இரு செயற்குழு உறுப்பினர்கள் மீதும் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.
வருகிற 2018ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த இங்கிலாந்து மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்த போட்டியை பயன்படுத்தி 'பிபா'வில் ஓட்டளிக்கும் உரிமையுள்ள இரு செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்ள திட்டமிட்டனர்.இதனால் 2018ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த மும்முரமாக களத்தில் இறங்கியுள்ள இங்கிலாந்திடம் அந்த நாட்டிற்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் கேட்தாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
நைஜீரியா கால்பந்து சங்க நிர்வாகி அமாஸ் அடாமு இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதில் முதன்மையானவர்.மற்றொருவர் ஓசானியா கால்பந்து சம்மேளனத்தலைவர் ரெனால்ட் டொமாரி.இந்த இருவரும் இங்கிலாந்துக்கு ஆதரவாக ஓட்டளிக்க பணம் கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொண்ட 'பிபா' இந்த இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இவர்கள் இருவரும் இன்று(20ந் தேதி) சூரிச்சில் உள்ள 'பிபா' தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
இதற்கிடையே 2018ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்காது என்று கருதிய அமெரிக்கா போட்டியில் இருந்து விலகியுள்ளது.2022ம் ஆண்டு உலக கோப்பையில் கவனம் செலுத்தப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.வருகிற 2018 மற்றும் 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த உள்ள நாடுகளை டிசம்பர் 2ந் தேதி சூரிச்சில் நடைபெறும் தேர்தலில் 'பிபா'வின் 24 செயற்குழு உறுப்பினர்கள் ஓட்டெடுப்பு மூலமாக தேர்வு செய்வார்கள்.
2018ம் ஆண்டு உலக கோப்பை நடத்த இங்கிலாந்து, ரஷ்யா,பெல்ஜியம்-நெதர்லாந்து,போர்ச்சுகல்-ஸ்பெயின் நாடுகளும்,2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த அமெரிக்கா,கத்தார்,ஆஸ்திரேலியா,ஜப்பான்-தென்கொரிய நாடுகளும் போட்டி போடுகின்றன.



Na

கருத்துகள் இல்லை: