1 அக்., 2012

மாலிங்க அபாரம்: நடப்புச் சம்பியனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை
 



நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியை 19 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அரையிறுதிக்குள் நுழைந்தது.

கண்டி பல்லேகலேயில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
eng1_x264_003 by dm_50589e4f69af4

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க மஹேல ஜயவரத்தனவுடன் கமிறங்கிய டில்சான் சிறப்பான ஆரம்பத்தை அமைத்த போதும் 16 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து சங்கா ஜயவர்தனவுடன் இணை சேர்ந்தார். இவ்விரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 39 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக்கொண்ட போது ஜயவர்தன 42 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப சொற்ப நேரத்திலேயே குமார் சங்கக்காரவும்; 13 ஓட்டங்களுடன் அரங்குக்கு சென்றார்.


இதன் பின்னர் மெத்தியூஸ் ஜீவன் மெண்டிசுடன் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை மேலும் வலுப்படுத்தினர். நான்காவது விக்கெட்டுக்காக இருவரும் 54 ஓட்டங்களை பெற்ற போது மெண்டிஸ் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்த பந்திலேயே மெத்தியூசும் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த திரிமனே (13), திசர பெரேரா (26), குலசேகர (1) வலுச் சேர்க்க இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. இதேவேளை இருபதுக்கு 20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி பெற்ற மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவானது.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஸ்டுவர்ட் புரோட் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. துடுப்பாட்டத்தில் பட்டேல் மாத்திரம் அதிகூடுதலாக 67 ஓட்டங்களையும் ஸ்சுவான் 34 ஓட்டங்களையும் பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இலங்கை அணியில் அதிரடியாக பந்து வீசிய மாலிங்க 5 விக்கெட்டுகளையும் அக்கில தனஞ்ஜெய இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இப்போட்டியின் ஆட்டநாயகனா பந்து வீச்சில் அசத்திய மாலிங்க தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் பின்னர் இ பிரிவில் இடம்பெற்ற அணிகளில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.

கருத்துகள் இல்லை: