16 அக்., 2012

சாம்பியன்ஸ் லீக்: சிட்னி சிக்சர்ஸ் அணியிடம் வீழ்ந்தது சென்னை
சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது4ஆவது சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் 4 இடங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் 2ஆவது நாளான நேற்று நடந்த பி பிரிவு முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சிட்னி சிக்சர்ஸ் (அவுஸ்திரேலியா) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர டோனி, சிட்னி சிக்சர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக லம்ப், ஷேன் வொட்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து அதிரடியாக ஆடியதால் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.



6 ஓவர்களில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 50 ஓட்டங்களாக உயர்ந்த போது லம்ப் (16 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ஓட்டங்கள்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடித்து ஆடிய ஷேன் வொட்சன் (30 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ஓட்டங்கள்) ரன் அவுட் ஆனார். நிதானமாக ஆடிய மாட்டிசன் (12 ஓட்டங்கள்) அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

பின்னர் களம் கண்ட வீரர்களும் தங்கள் பங்குக்கு அடித்து ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். அணித் தலைவர் பிராட் ஹெடின் 20 ஓட்டங்களுடனும் (18 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), சுமித் 26 ஓட்டங்களுடனும் (17 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்தனர்.


நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிட்னி சிக்சர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை குவித்தது. ஹென்ரிக்ஸ் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டும், ஹில்பனாஸ், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. விஜய் ஒரு ஓட்டத்துடன் ஸ்டார்க் பந்து வீச்சில் போல்டு ஆனார். டுபிளிஸ்சிஸ் (25 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 43 ஓட்டங்கள்), சுரேஷ் ரெய்னா (33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ஓட்டங்கள்) ஆகியோர் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார்கள். அவர்கள் ஆட்டம் இழந்த பின்னர் அணியின் வெற்றி நம்பிக்கையும் கரைந்து போனது.

இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னி சிக்சர்ஸ் வீரர் ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கருத்துகள் இல்லை: