புதிய உற்சாகத்துடனும், நிறைய எதிர்பார்ப்புகளுடனும் புது வருடமான 2013ம் ஆண்டுக்குள் நாம் காலடி எடுத்து வைக்கும் முன், கடந்த கால 2012ம் ஆண்டின் நினைவுகளையும், சாதனைகளையும் நினைவுகூகடமைப்பட்டிருக்கின்றோம்.
2012ம் ஆண்டு விளையாட்டுக்கு மிக முக்கியமான ஆண்டு என்றே கூறலாம். இவ்வருடத்தில் லண்டனில் நடைபெற்ற பிரம்மாண்ட ஒலிம்பிக் போட்டி, டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், யூரோ கிண்ண கால்பந்து தொடர், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் போன்ற எண்ணற்ற போட்டிகள் நடைபெற்றன.
கிரிக்கெட்டின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் சதத்தில் சதம் அடித்தது உட்பட எண்ணற்ற சாதனைகளும் இவ்வருடத்தில் அரங்கேறின.
கிரிக்கெட்
ஐ.பி.எல்
2012ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் 5 தொடர் ஏப்ரல் 4ம் திகதி தொடங்கி மே 27ம் திகதி முடிந்தது. ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் தொடங்குவதற்கு முதல் நாளான 3ம் திகதி ஐ.பி.எல் தொடக்க விழா மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகியோரும், நடிகைகளான பிரியங்கா சோப்ரா, கரினா கபூர் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர். நடன இயக்குநரான பிரபுதேவாவின் சிறப்பு நடனமும் இடம்பெற்றது.
மேலும், அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரியும் கவர்ச்சி நடனமும் பலரையும் ரசிக்க வைத்தது. இப்போட்டியை 163 மில்லியன் மக்கள் கண்டுகளித்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்றது.
அதிக ஓட்டங்கள் குவித்தோருக்கான ஆரஞ்சு தொப்பியை கிறிஸ் கெய்லும், அதிக விக்கெட் குவித்தோருக்கான கத்தரிப்பூ தொப்பியை மோர்னே மார்கலும் வென்றனர். சுனில் நரைன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற ஆசிய கிண்ண ஒருநாள் தொடர் மார்ச் 11ம் திகதி முதல் 22ம் திகதி வங்கதேசத்தில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிச்சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.
இத்தொடரில் வங்கதேசத்துக்கெதிரான போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பல விமர்சனங்களுக்கு மத்தியில் தனது 100வது சதத்தை நிறைவு செய்து உலக சாதனை படைத்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான 8வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் ஓகஸ்ட் 11ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடைபெற்றது. இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் உட்பட 16 அணிகள் பங்கேற்றன.
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது. ஆட்டநாயகனாக அணித்தலைவர் உன்முக் சந்த் தெரிவு செய்யப்பட்டார்.
நான்காவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் செப்டெம்பர் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 7ம் திகதி வரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் உட்பட 12 அணிகள் பங்கேற்றன.
ஆடவர் பிரிவின் இறுதிச்சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணியுடன் மோதியது. இதில் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி கிண்ணத்தை வென்றது.
இப்போட்டியின் நாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் மர்லோன் சாமுவேல்ஸ் தெரிவானார். இத்தொடரின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் தெரிவானார்.
இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிச்சுற்றில் உலகக் கிண்ணத்தை(ஒருநாள் மற்றும் டி20) தவறவிட்டது.
மகளிர் பிரிவின் இறுதிச்சுற்றில் நடப்பு அவுஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. இதில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்று அவுஸ்திரேலியா அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்தது.
இந்தியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள உள்ளுர் லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மோதின. இப்போட்டி ஒக்டோபர் 9ம் திகதி முதல் 28ம் திகதி வரை தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது.
இதில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிட்னி சிக்சர்ஸ் அணி, தென் ஆப்ரிக்காவின் ஹைவெல்டு லயன்ஸ் அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.
பிறீமியர் லீக் கால்பந்து தொடர் கடந்த 2011 ஓகஸ்ட் 13ம் திகதி முதல் 2012 மே 13ம் திகதி வரை பிரிட்டனின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இத்தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் குயின்ஸ்பார்க் ரேஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி 44 ஆண்டுகள் கழித்து பிறீமியர் லீக் பட்டத்தை வென்றது.
ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த 16 முன்னணி அணிகள் பங்கு பெற்ற இத்தொடர் போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் யூன் 8ம் திகதி முதல் யூலை 1ம் திகதி வரை நடைபெற்றது.
இதில் சி பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதன் இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் ஸ்பெயின் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது.
மேலும், இத்தொடரில் சிறப்பாக விளையாடி அதிக கோல் அடித்த ஸ்பெயின் அணியின் பெர்னான்டோ டோரஸுக்கு தங்க சப்பாத்து விருது வழங்கப்பட்டது.
நேரு கிண்ண கால்பந்து தொடர் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஓகஸ்ட் 22ம் திகதி முதல் செப்டெம்பர் 2ம் திகதி வரை நடைபெற்றது. இதில் கேமரூன் அணியை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.
சர்வதேச டென்னிஸ் தொடரில் அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெற்றன.
அவுஸ்திரேலியா ஓபன்
முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஜனவரி 16ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, ரஷ்யாவிக் மரியா ஷரபோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மே 27 முதல் யூன் 11ம் திகதி வரை நடைபெற்றது. ஆடவர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி 7வதுமுறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓகஸ்ட் 27ம் திகதி முதல் செப்டெம்பர் 10ம் திகதி வரை நடைபெற்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
நான்கு ஆண்டுகளுக்கு முறை நடத்தப்படும் உலகின் மிக முக்கியமான விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு பிரிட்டன் தலைநகர் லண்டனில் யூலை 27ம் திகதி முதல் ஓகஸ்ட் 12ம் திகதி வரை நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டிகள் ஓகஸ்ட் 29ம் திகதி முதல் செப்டெம்பர் 9ம் திகதி வரை நடைபெற்றது.
30வது ஒலிம்பிக் போட்டியான இதில் விருதுகளுடன் நிறைய சாதனைகளும், சர்ச்சைகளும் நடந்தேறியது. 204 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் அமெரிக்கா 46 தங்கங்கள், 29 வெள்ளிகள், 29 வெண்கலங்களைப் பெற்று 104 மொத்தப் பதக்கங்களோடு முதலிடத்தை நிறைவு செய்தது.
சீனா 38 தங்கங்கள், 27 வெள்ளிகள், 22 வெண்கலப் பதக்கங்களோடு மொத்தமாக 87 பதக்கங்களுடன் தங்களது ஒலிம்பிக்கை நிறைவுசெய்தது.
போட்டிகளை நடத்தும் நாடான பிரிட்டன் 29 தங்கங்கள், 17 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களோடு மொத்தமாக 65 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்தியா 6 பதக்கத்தை வென்றது. இலங்கை எவ்வித பதக்கத்தையும் வெல்லவில்லை.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் கடந்த மே 11ம் திகதி தொடங்கி 30 திகதி முடிவடைந்தது.
இப்போட்டியில் இந்திய செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி 5வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அதுமட்டுமின்றி நடப்புச் சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டார். கடந்த 2000, 2007, 2008 மற்றும் 2010 என நான்கு முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக