சவுராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சிக் கிண்ண இறுதிச்சுற்றில் வாசிம் ஜாபர் சதம் அடித்து கைகொடுக்க மும்பை அணி முன்னிலை பெற்றது.
ரஞ்சிக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிச்சுற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் மும்பை, சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 148 ஓட்டங்களுக்கு சுருண்டது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று தொடங்கிய 2ம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்சை தொடர்ந்த மும்பை அணியின் கவுஸ்துப் பவார் 21 ஓட்டங்களும், அடுத்து வந்த ஆதித்யா தாரே 3 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “மாஸ்டர் பேட்ஸ்மேன்” சச்சின் 22 ஓட்டங்கள் எடுத்த போது “ரன்-அவுட்” ஆனார். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய வாசிம் ஜாபர், ரஞ்சி கிண்ண அரங்கில் தனது 32வது சதம் அடித்தார்.
அபாரமாக ஆடிய ஜாபர் ஒரு சிக்சர், 16 பவுண்டரியுடன் 132 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் மும்பை அணி 6 விக்கெட்டுக்கு 287 ஓட்டங்கள் எடுத்து 139 ஓட்டங்கள் முன்னிலை வகித்திருந்தது.
புதிய சாதனை
நேற்று அபாரமாக ஆடிய மும்பை அணியின் வாசிம் ஜாபர் ரஞ்சிக் கிண்ண தொடரில் தனது 32வது சதத்தை நிறைவு செய்தார். இதன்மூலம் ரஞ்சிக் கிண்ண வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார்.
பொறுப்பாக ஆடிய வாசிம் ஜாபர், 132 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ரஞ்சிக் கிண்ண அரங்கில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 9155 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இவரை அடுத்து, அமோல் மஜும்தார் (9105 ஓட்டங்கள்) இரண்டாமிடத்திலும், கனித்கர் (7885 ஓட்டங்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக