ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச் |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
101வது அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்றது.
நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மூன்றாமிடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை சந்தித்தார்.
மூன்று மணி நேரம் 40 நிமிடம் வரை நீடித்த இப்போட்டியில் ஜோகோவிச் 6-7, 7-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இது, இவரது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். அவுஸ்திரேலிய ஓபன் (2008, 2011-13), விம்பிள்டன் (2011), அமெரிக்க ஓபன் (2011) தொடர்களில் பட்டம் வென்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபனில் கடந்த ஆண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறிய இவர் 2வது இடம் பிடித்தார்.
இறுதிச்சுற்றில் அசத்திய ஜோகோவிச், அவுஸ்திரேலிய ஓபனில் 4வது முறையாக (2008, 2011, 2012, 2013) சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் வரிசையில் 2வது இடத்தை அமெரிக்காவின் அகாசி (1995, 2000, 2001, 2003), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் (2004, 2006, 2007, 2010) பகிர்ந்து கொண்டார்.
முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் ராய் எமர்சன் (6 முறை, 1961, 1963-67) உள்ளார்.
தவிர, ஜோகோவிச் (2011-13) அவுஸ்திரேலிய ஓபனில் “ஹாட்ரிக்” பட்டம் வென்ற மூன்றாவது வீரரானார். முன்னதாக அவுஸ்திரேலியாவின் ராய் எமர்சன் (1963-67), ஜாக் கிராவ்போர்டு (1931-33) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு ரூ. 13.7 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த முர்ரேவுக்கு ரூ. 6.8 கோடி பரிசு வழங்கப்பட்டது.
கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அவுஸ்திரேலியாவின் ஜார்மிலா காஜ்டோசோவா, மாத்யூ எப்டன் ஜோடி, செக் குடியரசின் லாசி, பிரான்டிசெக் செர்மக் ஜோடியை சந்தித்தது.
இதில் அபாரமாக ஆடிய அவுஸ்திரேலிய ஜோடி 6-3, 7-5 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
|
30 ஜன., 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக