13 டிச., 2010


23rd Mar 2010
  எத்தனையோ  உலக கோப்பை போட்டிகள் இருந்தாலும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு உள்ள மவுசு அலாதியானது. 'பிபா' என்று அழைக்கப்படும் உலக கால்பந்து சம்மேளம் சார்பாக இந்த போட்டி 1930ம் ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது.1904ம் ஆண்டு உலக கால்பந்து சம்மேளம் உருவாக்கப்பட்டது. 1900 மற்றும் 1904ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து சேர்க்கப்பட்டாலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு என்று தனியாக பதக்கங்கள் வழங்கப்படவில்லை. 1908ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து விளையாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்தது.ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து போட்டிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் 'பிபா' கால்பந்துக்கு என்று தனியாக உலக கோப்பை போட்டியை நடத்த முயற்சி எடுத்தது. 1908ம் ஆண்டு முதல் 1928ம் ஆண்டு வரை ஒலிம்பிக் கால்பந்து போட்டிதான் கால்பந்தில் மிகப் பெரிய போட்டி ஆகும். 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த கூட்டத்தில் உலக கோப்பை போட்டி நடத்துவதற்கு 'பிபா' சம்மதம் தெரிவித்தது.
 முதல் உலக கோப்பையை தென்அமெரிக்க நாடான உருகுவேயில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.ஆனால் முதல் உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கு அப்போதைய 'பிபா' தலைவர் ஜுல்ஸ் ரிமேட் கடும் போராட்டம் நடத்த வேண்டியது இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் ஐரோப்பாவில் இருந்து உருகுவேக்கு கப்பலில் பயணம் செய்தால் 2 மாதம் காலம் பிடிக்கும். இந்த சூழலில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முதல் உலக கோப்பை போட்டியில் பங்கு கொள்ளவில்லை. ஐரோப்பாவில் இருந்து பெல்ஜியம், பிரான்ஸ், யூகோஸ்லோவேகியா,ருமேனியா அணிகள் மட்டும் முதல் உலக கோப்பையில் கலந்து கொண்டன.இந்த போட்டியில் 7 தென் அமெரிக்க நாடுகள், 4 ஐரோப்பிய நாடுகள்,2 வடஅமெரிக்க நாடுகள் கலந்து கொண்டன.1930ம் ஆண்டு ஜுலை 13ந் தேதி முதல் உலக கோப்பை போட்டியின் முதல் ஆட்டங்கள் நடந்தன. இதில் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும் அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும் வீழ்த்தின. உலக கோப்பை போட்டியில் முதல் கோல் அடித்த பெருமையை பிரான்ஸ் வீரர் லுசியன் லாரன்ட் பெற்றார். இறுதி போட்டி உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் நடந்தது. 93 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்த ஆட்டத்தில் உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதல் உலக கோப்பையை கைப்பற்றியது.
 இரண்டாவது உலக கோப்பை போட்டி 1934ம் ஆண்டு இத்தாலியில் நடந்தது. முதல்முறையாக தகுதி சுற்று ஆட்டங்கள்  இந்த போட்டியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதி சுற்றில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.அதில் 16 அணிகள் தகுதி பெற்றன. இறுதி போட்டியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் செக்கஸ்லோவாகியா அணியை வீழ்த்தி உலக கோப்பையை வென்றது.
 1938ம் ஆண்டு உலக கோப்பை போட்டி பிரான்ஸில் நடந்தது.போட்டியை நடத்தும் நாடும், நடப்பு சாம்பியன் அணியும் தகுதி சுற்று ஆட்டத்தில் ஆடாமல் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறலாம் என்ற விதி உருவாக்கப்பட்டது. இறுதி போட்டியில் இத்தாலி 4-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி அணியை வீழ்த்தி 2வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.1942 மற்றும் 1946ம் ஆண்டுகளில் உலக போர் காரணமாக உலக கோப்பை போட்டி நடைபெறவில்லை.
 1950ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை பிரேசில் நடத்தியது. இந்த போட்டியில் முதல்முறையாக பிரிட்டிஷ் அணிகள் கலந்து கொண்டன.போர்புரிந்து கொண்டிருந்த நாடுகளுடன் விளையாட வேண்டிய சூழல் வரும் என்பதால் 1920ம் ஆண்டு 'பிபா'வில் இருந்து பிரிட்டிஷ் நாடுகள் விலகிக்கொண்டன.மீண்டும் 1946ம் ஆண்டு அந்த நாடுகளை 'பிபா'வில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று பிரிட்டிஷ் அணிகள் 'பிபா'வில் மீண்டும் உறுப்பினர்களாக இணைந்தன. 1950ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில்தான் முதல்முறையாக இங்கிலாந்து அணியும் கலந்து கொண்டது.
 அது போல் இந்த உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணியும் தகுதி பெற்றது. 'பங்காராபாய்ஸ்' என்று சர்வதேச கால்பந்தில் செல்லமாக அழைக்கப்படும் இந்திய அணி வீரர்கள் 'பூட்' (காலணி)அணிந்து விளையாட மறுத்தனர். வெறுங்காலில் விளையாடவும் அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்திய அணி அந்த உலக கோப்பை போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. அதன் பிறகு இன்று வரை இந்திய அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறவே இல்லை.மேலும் இந்த போட்டியின் போது உலக கோப்பை போட்டியின் தந்தை என்று அழைக்கப்படும் ஜுல்ஸ் ரிமேட் பெயரில் உலக கோப்பை உருவாக்கப்பட்டது.'பிபா' தலைவராக ஜுல்ஸ் ரிமேட் பதவியேற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையட்டி அவரது பெயரில் ஜுல்ஸ் ரிமேட் கோப்பை உருவாக்கப்பட்டது. இறுதி ஆட்டம் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானமான ரியோடி ஜெனிரோவின் மரக்காணா ஸ்டேடியத்தில் நடந்தது. ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரசிகர்கள் இந்த போட்டியை பார்த்தனர்.உலகில் அதிக மக்களால் ரசிக்கப்பட்ட முதல் விளையாட்டு போட்டி இதுதான். உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வென்று இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது.
  1934 முதல் 1978ம் ஆண்டு வரை உலக கோப்பை போட்டியில் 16 அணிகள் கொண்டன.போரும் குழப்பங்களும் நிறைந்த அந்தக் காலக்கட்டத்தில் அவ்வப்போது சில அணிகள் விலகிக் கொள்ளும்.1982 முதல் 1998ம் ஆண்டு வரை 24 நாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.1998ம் ஆண்டு 32 அணிகளாக உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 2010ம் ஆண்டு தென்னாபிரிக்காவில்  நடந்தது.  இறுதி போட்டியில் ஸ்பெயின்  l-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்த அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

கருத்துகள் இல்லை: