26 பிப்., 2011


இலங்கையுடனான போட்டி: 11 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி

First Published : 26 Feb 2011 06:32:20 PM IST

Last Updated : 26 Feb 2011 10:57:51 PM IST
கொழும்பு: பிப்.26: உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 10வது ஆட்டம் இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிதி முதலில் பேட்டிங் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அஹ்மத் ஷேஷாத், முகமத் ஹபீஸ் ஜோடி நிதானமாக ஆட்டத்தைத் துவக்கியது. ஷேஷாத் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹபீஸ் 32 ரன்னும், கம்ரான் அக்மல் 39 ரன்னும் எடுத்தனர். நடுவரிசையில் யூனுஸ் கானும் மிஸ்பா உல் ஹக்கும் நிலைத்து நின்று ஆடி 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர். யூனுஸ் கான் 72 ரன்னும், மிஸ்பா ஆட்டமிழக்காமல் 83 ரன்னும் எடுத்தனர். 50 ஓவர்களின் இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து, 277 ரன்கள் எடுத்தது.

இலங்கை தரப்பில் பெரேரா, ஹெராத் தலா 2 விக்கெட்களையும், மேத்திவ்ஸ், முரளிதரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு துவக்கம் நன்றாக அமைந்தது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அந்த அணியின் தரங்கா-தில்ஷன் இணை முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தது. தரங்கா 33 ரன்னும் தில்ஷன் 41 ரன்களும் சேர்த்தனர். அடுத்து ஜயவர்த்தனே 2 ரன்னிலும் சமரவீரா 1 ரன்னிலும் ஆட்டம் இழக்கவே அந்த அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. அணித்தலைவர் சங்ககராவும் சில்வாவும் மிக மெதுவாக ஆடி மேலும் விக்கெட்கள் விழாமல் பார்த்துக்கொண்டனர். சங்ககரா 49 ரன்னிலும் சில்வா 57 ரன்னிலும் ஆட்டம் இழக்க ஆட்டத்தின் போக்கு முழுவதும் பாகிஸ்தான் வசம் வந்தது. அந்த அணியின் மேத்திவ்ஸ் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கருத்துகள் இல்லை: