21 பிப்., 2011


ஹேல, சங்ககார அபார ஆட்டம் : இலங்கை அணி 210 ஓட்டங்களால் வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011, 05:25.46 பி.ப GMT ]
உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் கனேடிய அணியை 210 ஓட்டங்களால் தோற்கடித்தது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற குழு 'ஏ' அணிகளுக்கிடையிலான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 332 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க 19 ஓட்டங்களுடனும் திலகரட்ன தில்ஷான் 50 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
3ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் குமார் சங்கக்காரவும் மஹேல ஜயவர்தனவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 179 ஓட்டங்களைப் பெற்றனர். குமார் சங்கக்கார 92 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஜோன்டேவிசனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மஹேல ஜயவர்தன 80 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் உலக கிண்ண போட்டியொன்றில் அதிவேகமாக சதம் குவித்த இலங்கை வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். எனினும் அடுத்த பந்துவீச்சிலேயே அவர் டேவிசனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து வந்த திசேர பெரேராவும் (11) சாமர கப்புகெதரவும் (2) சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
கடைசி 10 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ஓட்டங்கள் எனும் நிலையிலிருந்த இலங்கை அணி மேலதிக 19 ஓட்டங்களுடன் மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏஞ்சலோ மத்திவ்ஸ் 21 ஓட்டங்களைப்பெற்றார். திலான் சமரவீர ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களையும் நுவன் குலசேகர ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களையும் பெற்றனர்.
50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 332 ஓட்டங்களைப் பெற்றது.
கனேடிய பந்துவீச்சாளர்களில் ஜோன் டேவிசன் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்விர் பைத்வான் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய கனேடிய அணி 36. 5 ஓவர்களில் 122 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கனேடிய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் சீமா, 37 ஓட்டங்களைப்பெற்றார்.
இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் நுவன் குலசேகர 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் திசேர பெரேரா 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முத்தையா முரளிதரன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மஹேல ஜயவர்தன இப்போட்டியின் சிறப்பாட்டக்காராக தெரிவானார்.

கருத்துகள் இல்லை: