25 பிப்., 2011


அயர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் முதல் வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 07:18.52 பி.ப GMT ]
உலகக் கோப்பையின் 9-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் 27 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
முதலில் ஆடிய வங்கதேசம் 49.2 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 45 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பூவா தலையா வென்ற வங்கதேசம் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. தமிம் இக்பாலும், இம்ருல் கயெஸம் ஆட்டத்தைத் தொடங்கினர்.
தமிம் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். இதனால் 5.5 ஓவர்களில் வங்கதேசம் 50 ரன்களைக் கடந்தது. அணியின் ஸ்கோர் 53 ரன்களை எட்டியபோது கயெஸ் 12 ரன்களில் வீழ்ந்தார். பின்னர் வந்த சித்திக் 3 ரன்களில் ஆட்டமிழக்க, முஷ்பிகுர் ரகிம் களம் புகுந்தார்.
அணியின் ஸ்கோர் 68 ரன்களை எட்டியபோது இக்பால் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் கண்ட கேப்டன் ஷகிப் அல்ஹசன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வங்கதேசம் 147 ரன்களை எட்டியபோது ரகிம் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்தவர்களில் ரஹிபுல் ஹசன் 38 ரன்களும், நயீம் இஸ்லாம் 29 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் விரைவாக வெளியேறியதால் அந்த அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அயர்லாந்து தோல்வி: 206 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டிர்லிங் 9 ரன்களிலும், போர்ட்டர்பீல்டு 20 ரன்களிலும், ஜாய்ஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களம் புகுந்த நீல் ஓ'பிரையன்-கெவின் ஓ'பிரையன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க கடுமையாகப் போராடியது. அணியின் ஸ்கோர் 110 ரன்களை எட்டியபோது நீல் ஓ'பிரையன் 38 ரன்களில் ஆட்டமிழக்க மீண்டும் சரிவுக்குள்ளானது அயர்லாந்து. இதையடுத்து கெவின் ஓ'பிரையனும் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்வரிசை வீரர்கள் வேகமாக வெளியேறியதால் அயர்லாந்து அணி 45 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் வங்கதேசம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வங்கதேச வீரர் ஷபியுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தமிம் இக்பால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்தது வங்கதேசம்.

கருத்துகள் இல்லை: