12 மார்., 2011

பரபரப்பான போட்டியில் இந்தியாவை 3 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது தென்னாபிரிக்கா
[ சனிக்கிழமை, 12 மார்ச் 2011, 05:39.31 பி.ப GMT ]
இந்திய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
நாக்பூர் நகரில் நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியஅணி 48.4 ஓவர்களில் 296 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 101 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பெற்றார்.

உலகக்கிண்ணப் போட்டிகளில் சச்சின் பெற்ற 6 ஆவது சதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இது.

வீரேந்தர் ஷேவாக் 66 பந்துகளில் 73 ஓட்டங்களையும் 3 ஆவது வரிசை வீரர் கௌதம் காம்பீர் 69 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 40 ஆவது ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும் கடைசி 9 விக்கெட்டுகளையும் மேலதிக 29 ஓட்டங்களில் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் டேல் ஸ்டைய்ன் 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 49;.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்க அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 3 விக்கெட்டுகள் கைவசமிருந்தன. ஸஹீர்கான் வீசிய ஓவரில் தென்னாபிரிக்க அணி வீரர்களான பவ் டி பிளெஸிஸும் ரொபின் பீற்றர்சனும் தலா இரு ஓட்டங்களைப் பெற்றனர்.

கடைசி ஓவரில் தென்னாபிரிக்க அணி 13 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்தது. ஆஷிஸ் நெஹ்ரா பந்துவீச வந்தார்.

முதல் பந்தில் பௌண்டரி அடித்த ரொபின் பீற்றர்சன் அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தார். 3 ஆவது பந்தில் 2 ஓட்டங்களைப் பெற்ற அவர் 4 ஆவது பந்தில் மற்றொரு பௌண்டரி அடிக்க தென்னாபிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. இதன்மூலம் அவ்வணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

கருத்துகள் இல்லை: