23 மார்., 2011

அழுத்தங்களுக்கு மத்தியில் ஆஸியும் இந்தியாவும் (சிறப்புக் கட்டுரை)
வீரகேசரி இணையம் | Views(393)
Wednesday 23 March 2011, 7:19 pm
Share


கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் அதிக ரசிகர்களைக் கொண்ட ஓர் அணியாகவே இந்தியா அடையாளம் காணப்படுகின்றது.

தமது வீரர்கள் வெற்றியீட்டும் போது அவர்களின் படங்களுக்கே பாலாபிஷேகம் செய்து காசுமாலை அணிவித்து கொண்டாடும் இந்த ரசிகர்கள் தோல்வியடைந்தாலோ அதற்கு நேர்மாறாக செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி உருவபொம்மைகளை எறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்து குணாம்சம் கொண்டவர்கள். இதனால்தான் அவர்களை கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிப்பவர்கள் என கூறவேண்டியதாயிற்று.

கொண்டாட்டங்களை நடத்தவோ அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவோ இரண்டில் ஒன்றை ரசிகர்களை செய்யத் தூண்டக்கூடிய ஒரு போட்டியாகவே உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது காலிறுதிப் போட்டி உள்ளது. இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் மோதவுள்ள இந்தப் போட்டியின் முடிவே இதனை தீர்மானிக்கும்.

எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு முகம்கொடுப்பதைவிட இந்திய ரசிகர்களின் முன்பாக விளையாடுவதுதான் கடினம் என ஏற்கனவே சுனில் கவாஸ்கர் கூறியிருக்கும் கருத்து இதற்கு சிறந்த உதாரணம். எந்த வீரர் சாதித்தார் என்பதைவிட இந்தியா வெற்றிபெற்றதா என்பதுதான் அவசியம். பிரகாசிக்கத் தவறியவர் சச்சினாக இருந்தாலும் சரி அஸ்வினாக இருந்தாலும் சரி அவர்களுக்கு செருப்பு மாலை நிச்சயம். இதுதான் இந்திய ரசிகர்களின் கொள்கை.இந்தக் கொள்ளைக்குள் சிக்கிவிடாமல் தங்கள் உடைமைகளையும், உறவுகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமிக்க அழுத்தத்துடனேயே இந்திய அணி காலிறுதியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆம். 10 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இந்தியா சற்று பின்தங்க ஆரம்பித்த உடனேயே அந்நாட்டு ஊடகங்களும் ரசிகர்களும் தங்கள் இஷ்ட நாயகர்களின் ஆட்டத்தை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

எனினும், ஒரு வழியாக லீக் சுற்றில் தனது கடைசிப் போட்டியில் வெற்றிபெற்ற பெருமையுடன் பி குழுவில் இரண்டாமிடத்தைப் பிடித்த இந்தியாவுக்கு காலிறுதியில் பலமிக்க அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுமே கடும் அழுத்தங்களுடன் களமிறங்குகின்றன.
லீக் சுற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு பின்தங்கிய நிலையில் மூன்றாமிடத்தைப் பெற்ற அவுஸ்திரேலியா தனது பலத்தை நிரூபிக்கு வேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்கியுள்ளது. தொடர்ச்சியாக பிரகாசிக்கத் தவிறிவரும் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் ஆஸிய ஊடகங்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் இந்தப் போட்டியில் பிரகாசிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. இல்லாவிடில் காயம் என காரணங்காட்டி அவரை ஓரங்கட்டிவிட்டு மைக்கல் கிளார்க்கின் கையில் தலைமைப் பொறுப்பை கையளிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழு துளியளவும் தயங்காது.

ஆகவே, அணித்தலைவர் பதவியை காத்துக்கொள்வதுடன் இதுநாள் வரை தம்வசமிருந்த பெருமையை இழக்காமல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் கனவுடன் இருக்கும் ரிக்கி பொண்டிங் இந்தக் காலிறுதியில் வெற்றிபெற கடுமையாகப் போராடுவார். எனினும், வெற்றிமட்டும் போதாது என்பதுடன் இந்தப் போட்டியிலாவது துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு இருக்கும் ஒரே அழுத்தமாகும். லீக் சுற்றில் 6 போட்டிகளில் ஐந்தில் துடுப்பெடுத்தாடிய அவர் 102 ஓட்டங்களையே மொத்தமாகப் பெற்றுள்ளார். அதிகபட்சமாக அவர் 36 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் இதுவரை 9 போட்டிகளில் மோதியுள்ளதோடு அவற்றில் அவுஸ்திரேலியா 7 வெற்றிகளையும், இந்தியா 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இறுதியாக 2003 ஆம் ஆண்டு லீக் மற்றும் இறுதிப் போட்டியில் இந்த அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்தாடியுள்ளன. அந்த இரண்டு போட்டிகளிலுமே அவுஸ்திரேலியாவே வெற்றியீட்டியது.

இந்திய அணியைப் பொறுத்தவரை காலிறுதிப் போட்டிக்கு தயாராக இருந்தாலும் பந்துவீச்சில் தான் சற்று பின்தங்கியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக 177 ஓட்டங்களைப் பெற்றுவிட்டு அவுஸ்திரேலியா பந்துவீசிய விதத்திற்கும், இங்கிலாந்துக்கு எதிராக 327 ஓட்டங்களைக் குவித்துவிட்டு இந்தியா பந்துவீசிய விதத்திற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இதனால் இந்திய அணியின் தோல்வியடைந்தால் அதற்கான முழுக் காரணம் பெரும்பாலும் பந்துவீச்சாளர்களாகவே இருக்கவேண்டும்.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தமட்டில் இந்திய வீரர்கள் சிறப்பாகவே செயற்படுகிறார்கள். கடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகளை தாரைவார்ப்பதுதான் இந்திய அணியின் பலவீனமாக உள்ளது. லீக் சுற்றில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய மூன்று போட்டிகளில் 50 ஓவர்களை முழுமையாக எதிர்கொள்ளாத நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனிக்கும் இந்திய தேர்வுக்குழுவுக்கும் இடையில் சற்று மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இதனை தவிர்த்துக்கொண்டு முழு கவனத்தையும் போட்டியின் மீது செலுத்த வேண்டிய நிலையில் தோனி இருக்கிறார். எப்பாடுபட்டாவது வெற்றியீட்டி ரசிகர்களின் மனதை குளிரவைக்க வேண்டும் என்பதுதான் இந்திய வீரர்களின் தற்போதைய ஒரே இலக்காக இருக்கும்.

அத்துடன், அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான உலக சாம்பியன் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இந்தியாவுக்கே கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக 34 வெற்றிகளைப் பெற்ற அவுஸ்திரேலிய அணியின் சாதனை பயணத்தை கடந்த வாரம் பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டுவந்தது.

இதனைவைத்துப்பார்த்தால் 1999 ஆம் ஆண்டு வெற்றிப் பயணம் இத்துடன் முடிவுற்றதாவே கணிக்கப்படுகினக்றது. அவுஸ்திரேலிய அணியின் உலக சாம்பியன் பயணமும் முடிவுக்குவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆர்.கே.எஸ்.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் 1980 ஆம் ஆண்டு முதல் 2010 வரை 104 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் அவுஸ்திரேலியா 61 வெற்றிகளையும், இந்தியா 35 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 8 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: