12 ஜூன், 2014

உலக கோப்பை கால்பந்து திருவிழா 2014


உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கோலாகல திருவிழா கடந்து வந்த பாதையை பற்றிய அலசலை இங்கு பார்க்கலாம்.

முதலாவது உலக கோப்பை 1930 (சாம்பியன்–உருகுவே) நடத்திய நாடு: உருகுவே, பங்கேற்ற அணி–13 அடிக்கப்பட்ட கோல்கள்–70 முதலாவது உலக கோப்பையை நடத்துவதற்கு உருகுவே, ஸ்பெயின், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகள் உரிமை கோரின. நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அந்தஸ்து, புதிய ஸ்டேடியம் கட்டுவதாக வாக்குறுதி, அணிகள் பங்கேற்பதற்கான செலவுத் தொகை அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அளித்த உத்தரவாதம் போன்ற காரணங்களால் தென்அமெரிக்க நாடான உருகுவேக்கு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது.

உருகுவேயில் முதலாவது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக கோப்பை திருவிழாவும் சேர்ந்து கொண்டது. மொத்தம் 13 அணிகள் போட்டியில் பங்கேற்றன. தென்அமெரிக்க நாட்டிற்கு செல்வது நெடிய பயணம் மற்றும் அதிகமான செலவு பிடிக்கும் என்பதால் குறைந்த ஐரோப்பிய நாடுகள் (4) மட்டுமே முதலாவது உலக கோப்பையில் கலந்து கொண்டன.

தகுதி சுற்று இல்லாமல் நடத்தப்பட்ட ஒரே உலக கோப்பை இது தான். அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. மெக்சிகோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் லுசியன் லாரென்ட் 19–வது நிமிடத்தில் கோல் அடித்தார். உலக கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் கோல் இது தான். இந்த ஆட்டத்தில் 4–1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும், அர்ஜென்டினா, சிலிக்கு எதிரான லீக்கில் தோற்றதால் அரைஇறுதி வாய்ப்பை பெற தவறியது.

லீக் முடிவில் 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. அரைஇறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா 6–1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும், உருகுவே அணி 6–1 என்ற கோல் கணக்கில் யுகோஸ்லாவியாவையும் தோற்கடித்தன. இறுதிப்போட்டியில் உருகுவே–அர்ஜென்டினா அணிகள் 93 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடின. முதல் பாதியில் உருகுவே 1–2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போதிலும் பிற்பாதியில் சியா, இரியர்ட், கேஸ்ட்ரோ ஆகியோர் அடித்த கோலால் உருகுவே 4–1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று, முதல் உலக கோப்பை மகுடத்தை சூடிக் கொண்டது.

மொத்தம் 70 கோல்கள் பதிவாகின. அதிகபட்சமாக அர்ஜென்டினா வீரர் குல்லர்மோ ஸ்டாபிலே 8 கோல்கள் அடித்திருந்தார். முதலாவது உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் யாரும் இப்போது உயிருடன் கிடையாது. அர்ஜென்டினா அணிக்காக பங்கேற்ற பிரான்சிஸ்கோ வரலோ கடைசியாக தனது 100–வது வயதில் 2010–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தார். உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவரை மொத்தம் 2208 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

முதலாவது கோலை பிரான்ஸ் வீரர் லுசியன் லாரென்ட் (1930–ம் ஆண்டு) அடித்தார். 100–வது கோலை இத்தாலி வீரர் எஞ்சலோ ஸ்சியவியோ (1934–ம் ஆண்டு), 1000–மாவது கோலை நெதர்லாந்து வீரர் ராப் ரென்சென்பிரிங் (1978–ம் ஆண்டு), 2000–மாவது கோலை ஸ்வீடன் வீரர் மார்கஸ் அல்பேக் (2006–ம் ஆண்டு) ஆகியோர் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: