10 ஜூன், 2014

உலகக்கோப்பைக்குப் பிறகு கைதிகள் செயலாக்க மையமாக மாறும் பிரேசில் கால்பந்து மைதானம் 
பிரேசில் நாட்டில் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக பிரேசில் அரசு 12 மைதானங்களை கட்டி வருகின்றது. போட்டிகள் நடைபெறுவதற்கு 8 மைதானங்களே போதும் என்ற நிலையிலும் அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பினைத் தரவும் தங்களுடைய நம்பகத்தன்மையை வெளிப்படுத்திக் கொள்ளவும் அரசை நிர்ப்பந்தித்து செலவு செய்து வருகின்றனர்.

உலகக்கோப்பை போட்டியை நடத்த மொத்தம் 13.3 பில்லியன் டாலர் மதிப்பீடப்பட்டள்ளது. அதில் மைதானங்களுக்கு மட்டும் 3.5 பில்லியன் டாலர் செலவிடப்படுகின்றது.

பொதுமக்கள் சேவைக் குறைபாடு, அதிக வரி, சமூக ஏற்றத்தாழ்வு போன்றவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை கேள்விக் குறியாக்கும்போது விளையாட்டிற்காக இத்தனை ஆடம்பர செலவுகள் தேவையில்லை என்று கடந்த ஜூலை மாதம் லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இவ்வளவு செலவில் கட்டப்படும் விளையாட்டு மைதானங்கள் அதற்குப் பின்னர் எதற்கும் பயன்படாது என்பது குறித்த சிந்தனை எழுந்துள்ளது. 44 ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அமேசொனாஸ் மாநிலம் மானுஸ் பகுதியில் உள்ள மைதானம் 275 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானம் உலகக் கோப்பை போட்டிகளின்போது நான்கு முறை மட்டுமே உபயோகப்படுத்தப்படும். 2.3 மில்லியன் மக்கள்தொகை உள்ள அந்தப் பகுதியில் விளையாட கால்பந்து அணி எதுவும் கிடையாது.

இதுபோன்றே தலைநகர் பிரேசிலியா, தென்மேற்குப் பகுதியில் உள்ள கியாபா, வடகிழக்குப் பகுதியில் உள்ள நடால் போன்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள மைதானங்களும் பயனில்லாமல் போகும். 2016-ம் ஆண்டு இங்கு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இதே போன்று பெருந்தொகை செலவிடப்படும்.

இதனிடையில் அமேசொனாஸ் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் சபினோ மார்குவெஸ் போட்டிகளுக்குப் பின்னர் மானுஸ் மைதானத்தை கைதிகளின் செயலாக்கத்திற்குப் பயன்படுத்தலாம் என்று நேற்று கருத்து தெரிவித்துள்ளார். இவர் அம்மாநிலத்தில் உள்ள சிறைகளை மேற்பார்வையிடும் அமைப்பிற்குத் தலைவராகவும் உள்ளார்.

பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சரான ஆல்டோ ரெபெலோ விளையாட்டு மற்றும் பிற நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு இந்த மைதானங்கள் பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மற்ற அரசு அதிகாரிகளோ சம்பந்தப்பட்ட நகர நிர்வாகங்கள் இந்த மைதானங்களின் பயன்பாடுகளுக்காக புதுமையான முறையில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: