18 மார்., 2013


கொழும்பு டெஸ்ட் போட்டியில் ஹெராத்தின் சுழற்பந்து ஆதிக்கம் தொடர்கிறது: வங்கதேச விக்கெட்டுகள் சரிவு
முஷ்பிகுர் ரகிம் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்

விளையாடி வருகிறது. இதில் காலேயில் நடந்த முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இலங்கையின் சுழலில் தடுமாறிய வங்கதேச அணி 240 ரன்களில் சுருண்டது. ஹாக் 64 ரன்களும், நசிர் உசைன் 48 ரன்களும் அடித்தனர். இலங்கை தரப்பில் ரங்கானா ஹெராத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து ஆடிய இலங்கை அணியின், சங்ககரா, சண்டிமால் இருவரும் சதம் அடித்து ஸ்கோரை உயர்த்தினர். சண்டிமால் 102 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா 127 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இன்று 3-ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய சங்ககரா 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்ற விக்கெட்டுகளும் விரைவில் சரிய, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 346 ரன்களில் முடிவுக்கு வந்தது. 

அதன்பின்னர் 106 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ம் இன்னிங்சை தொடங்கிய வங்க தேச அணிக்கு, இலங்கை மீண்டும் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்தனர். இருப்பினும் சமாளித்து ஆடிய துவக்க வீரர்கள் தமிம் இக்பால் (59 ரன்கள்), ஜகருல் இஸ்லாம் (48 ரன்கள்) ஆகியோர் தங்கள் பங்களிப்பை ஓரளவு நிறைவேற்றி பெவிலியன் திரும்பினர். முகமது அஷ்ரபுல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமதுல்லா ரன் எதுவும் எடுக்கவில்லை. முதல் இன்னிங்சில் அதிக ரன்களை பதிவு செய்த ஹாக், இந்த இன்னிங்சிலும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடி வருகிறார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. ஹாக் 36 ரன்களுடனும், முஷ்பிகுர் ரகிம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த இன்னிங்சிலும் ஹெராத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இலங்கையைவிட 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள வங்கதேச அணி, நாளை 4-ம் நாள் ஆட்டத்தின்போது விக்கெட்டைக் காப்பாற்ற தொடர்ந்து போராடும்.

கருத்துகள் இல்லை: