அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்திய அணி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கடைசி டெஸ்டில் அசத்தலாக விளையாடிய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை இத்தொடரில் 29 விக்கெட் வீழ்த்திய அஷ்வின் தட்டிச் சென்றார்.
அவுஸ்திரேலிய அணி 43 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக 4-0 என்று டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதற்கு முன் கடந்த 1969-70ல் தென் ஆப்ரிக்காவிடம் 4-0 என்று தொடரை இழந்தது.
டெஸ்ட் வரலாற்றில் 9வது வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் அவுஸ்திரேலியாவின் பீட்டர் சிடில். இவர், டில்லி டெஸ்டில் 51, 50 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிராக டெல்லியில் நடந்த 4வது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-0 என்று கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி தனது 81 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக 4-0 என முழுமையாக வென்றது.
கடந்த 1967-68ல் நடந்த நியூசிலாந்துக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என கைப்பற்றியது.
அவுஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் 12வது வெற்றியை பெற்றது.
இதுவரை இங்கு 32 டெஸ்டில் விளையாடியது. இதன்மூலம் இந்திய அணி, அதிக முறை வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய மைதானம் என்ற பெருமை பெற்றது. முதலிடத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானம் உள்ளது. இங்கு விளையாடிய 31 போட்டியில் 13ல் வெற்றி பெற்றது.
டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் முரளி விஜய் முதலிடம் பிடித்தார். இவர், 4 டெஸ்டில் (7 இன்னிங்ஸ்) 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 430 ரன்கள் எடுத்தார்.
இப்பட்டியலில் “டாப்-5” துடுப்பாட்ட வீரர்கள்:
முரளி விஜய் (இந்தியா) 430 புஜாரா (இந்தியா) 419 டோனி (இந்தியா) 326 கிளார்க் (அவுஸ்திரேலியா) 286 கோஹ்லி (இந்தியா) 284
இத்தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் முதலிடம் பிடித்தார். இவர், 4 டெஸ்டில் 29 விக்கெட் வீழ்த்தினார்.
இவ்வரிசையில் “டாப்-5” பந்துவீச்சாளர்கள்:
அஷ்வின் (இந்தியா) 29 ஜடேஜா (இந்தியா) 24 லியான் (அவுஸ்திரேலியா) 15 பட்டின்சன் அவுஸ்திரேலியா) 9 சிடில் (அவுஸ்திரேலியா) 9
டெல்லி டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கெதிராக தொடர்ந்து 8 டெஸ்டில் வெற்றி தேடித் தந்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமை பெற்றார் டோனி.
இதுவரை இவர் 47 போட்டிகளுக்கு அணித்தலைவராக இருந்துள்ளார். இதில் 24 வெற்றி, 11 “டிரா” 12 தோல்வியை பெற்றுள்ளார்.
* தவிர இவர், எந்த ஒரு அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமை பெற்றார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக