7 மார்., 2013

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி டுனேடினில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரண்டன் மெக்கலம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
நியூசிலாந்து அணியில் முன்னாள் அணித்தலைவர் கென் ரூதர்போர்டின் மகன், ஹமீஸ் ரூதர்போர்டு, புரூஸ் மார்டின் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர்.
இதில் இடது கை பந்துவீச்சாளர் புரூஸ் மார்டின் கடந்த 1999ல், டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். ஆனால் அவர் அப்போது போட்டியில் பங்கேற்கவில்லை. அதன்பின் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கிறார்.
போட்டி தொடங்கும் முன்னர், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் நடுவர்கள் சிறிது நேரம் போட்டியை நிறுத்தி வைத்தனர். இதன் பின்னர் மழை குறுக்கிட்டதால் போட்டி தொடங்குவது தாமதமானது.
தேநீர் இடைவேளைவரை பலத்த மழை தொடர்ந்ததால் 75 நிமிடங்கள் மீதம் இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்தனர். இதனை ஈடுகட்ட எஞ்சியுள்ள நான்கு நாட்களில் போட்டி முழுநேரம் நடக்கும் பட்சத்தில் ஓவர்கள் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: