23 மார்., 2013


அமெரிக்கப் பிரேரணையின் அழுத்தங்கள் அரசியல் தீர்வுக்கு உதவப்போவதில்லை: டகளஸ்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணை என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வுக்கு உதவப்போவதில்லை என்றும், மாறாக தமிழ் முஸ்லிம்
சிங்கள மற்றும் அளும் அரசாங்க கட்சிகள் யாவும் ஒன்று பட்டு செயற்படுவதற்கான நல்லெண்ண சமிஞைகளே உள்நாட்டு பிரச்சினையை தீர்க்கவும், அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணவும் அவசியமானது எனவும்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டகளஸ் தேவானந்தா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பது போல் எமது பிரச்சினைகளை நாம் மட்டுமே பேசி தீர்க்க முடியும். அரசியல் தீர்வு என்ற குழந்தையை நாம் பிரசவிப்பதற்கு வெளியுலக விருப்பங்களும், உதவிகளும் ஒரு மருத்துவிச்சியின் சேவையினையே எமக்கு வழங்க முடியும். வெளியுலக தீர்மானங்கள் எவையும் தத்தமது நாடுகளின் நலன் சார்ந்த இலங்கை அரசுடனான விருப்பு வெறுப்புகளை கொண்டிருக்க முடியாது.

மாறாக அவை தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு குறித்த நலன்களை பிரதான நோக்காக கொண்டிருப்பதையே நாம் விரும்புகின்றோம். எமக்கு தேவை,... தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான ஓர் அரசியல் தீர்வு. அதற்கான நடைமுறை சாத்தியமான வழிமுறை. கடந்த கால அழிவுகளில் இருந்து எமது மக்கள் மீண்டெழுவதற்கான வாழ்வியல் எழுச்சி.தொடர்ந்தும் இங்கு நீடித்து நிலவ வேண்டிய மனித உரிமைகள்,
மற்றும் அடிப்படை ஐனநாயக உரிமைகள். வறுமையற்ற வாழ்வு,... வரலாற்று வாழ்விடங்களில் அபிவிருத்தி, இவைகளுக்காகவே நாம் ஏனையவர்கள் போல் அன்றி வெளிப்டையாகவே அரசுடன் இணக்கமாக பேசி செயற்பட்டு வருகின்றோம்.

அரசியல் தீர்விற்கான நல்லெண்ண சமிஞையினையும் காட்டி வருகின்றோம்.
அனாலும், தமிழ் பேசும் மக்களை தவறாக வழிநடத்தி, தேர்தல் காலங்களில் அவர்களது நரம்புளை முறுக்கேற்றி பெரும்பான்மை பலத்தோடு நாடாளுமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களை கடந்த காலங்களை போல் ஏமாற்றி வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் சர்வதேச சமூகம் அரசியல் தீர்வுக்கு கிடைத்திருக்கும் சந்தர்பங்களை சரிவரப் பயன்படுத்த மறுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் அழுத்தங்களை கொடுக்கட்டும்.

நாம் சொல்லி வந்தவைகளே இது வரை இங்கு நடந்து முடிந்திருக்கிறது.
இனி இங்கு நடக்கப்போவதும் எமது தீர்க்க தரிசனங்களே.

வரலாறு யாருக்காவும் காத்திருக்காது. வந்து சேருங்கள் நடைமுறை சாத்திய வழிமுறை நோக்கி என்று நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம். தமிழ் பேசும் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக நடைமுறைச்சாத்திய வழி நின்று வெற்றி பெறும் காலம் விரைவில் நிகழும் என்று தெரிவித்துள்ளார்
.

கருத்துகள் இல்லை: