பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 570 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் மூன்று வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.
இலங்கையின் கல்லே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன், இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை
தொடர்ந்தது இலங்கை அணி. அந்த அணியின், திரிமன்னே 74 ரன்களுடனும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர்.
கேப்டன் மேத்யூஸ் 27 ரன்களில் வெளியேற, மறுமுனையில் சந்திமாலுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் திரிமன்னே. இந்த ஜோடி பங்களாதேஷ்ஷின் பந்துகளை துவம்சம் செய்து, ரன்கள் குவித்தது. 4 விக்கெட் இழப்புக்கு 570 ரன்கள் எடுத்திருந்த போது, இலங்கை அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
அந்த அணியின் திரிமன்னே 155 ரன்களும், சந்திமால் 116 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்றைய ஆட்டத்தில் சங்ககாரா 142 ரன்கள் எடுத்திருந்தார்.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்ததை தொடர்ந்து, பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இன்றைய இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் மொஹமது அஷ்ரஃபுல் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக